வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து, தொலைக்காட்சி பார்த்த ஆடவர்

ஜப்பானில் வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தோக்கியோவைச் சேர்ந்த ரியோத்தா மியாஹாரா (Ryota Miyahara) உணவகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் வீடுகள் மீது கண் வைத்திருந்ததாக நம்பப்படுகிறது.
மியாஹாரா அவ்வாறு கடந்த ஆண்டு உணவக ஊழியர் ஒருவரைக் குறிவைத்ததாக The mainichi ஊடகம் சொன்னது.
ஊழியரின் பையை ரகசியமாக அலசிப் பார்த்த அவர் பெண்ணின் ஓட்டுநர் உரிம அட்டையையும் வீட்டுச் சாவியையும் கண்டதாக நம்பப்படுகிறது.
ஓட்டுநர் உரிம அட்டையில் பெண்ணின் வீட்டு முகவரி இருந்ததை மியாஹாரா கவனித்தார்.
சாவியின் ரகத்தையும் அறிந்து வைத்திருந்த அவர் பின்னர் ஒரு மாதிரியைச் செய்தார்.
மாதிரியை வைத்து அவர் பெண்ணின் வீட்டுக்கு 10 முறைக்கும் அதிகமாகச் சென்றுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
ஒருமுறை வீட்டுக்குள் அத்துமீறி புகுந்தபோது மியாஹாரா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து, காவல்துறையினர் வருவதற்குள் அவர் வீட்டில் இரண்டு மணிநேரம் கழித்ததாக The mainichi தெரிவித்தது.
அவர் மற்ற பெண்களின் வீடுகளுக்கும் சென்றிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
வீட்டுச் சாவிகளின் மாதிரிகளைக் கொண்டு 20 வீடுகளுக்குள் புகுந்திருப்பதாக மியாஹாரா காவல்துறையிடம் கூறியுள்ளார்.
அவர் வீடுகளிலிருந்து பெண்களின் உள்ளாடைகளைத் திருடியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.