உலகம் trending
வெள்ளத்தில் அடித்துச் சென்ற பூனை… உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றியவர்!
படம்: Instagram/@_harith_hhhs
This audio is generated by an AI tool.
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட பூனை.. யாராவது அதைக் காப்பாற்றமாட்டார்களா என்று ஏக்கத்துடன் அருகில் இருந்தோர் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒருவர் நீரில் குதித்துப் பூனையைக் காப்பற்றினார். மனத்தை நெகிழ வைக்கும் அந்தச் சம்பவம் ஒமானில் (Oman) நடந்தது. அங்குப் பெய்து வரும் கனத்த மழையால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனால் மக்கள் அவதியுற்று வரும் வேளையில் அந்தச் சம்பவம் நடந்தது. ஆடவர் பூனையைக் காப்பாற்றிய காட்சியின் காணொளிகள் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வருகின்றன. வேகமாக நீரில் அடித்துச் செல்லப்பட்ட பூனையை நோக்கி அவர் பாய்வதைக் காணொளிகள் காட்டுகின்றன. லாவகமாகப் பூனையைப் பிடித்து உடனே அருகிலுள்ள கடைக்கு முன்பிருந்த நடைபாதையில் தூக்கிப்போட்டார். அதைப் பார்த்த மக்கள் ஆரவாரமாகக் கூச்சலிட்டு அவரைப் பாராட்டினர். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைகளை அசைத்துவிட்டு ஒரு சிறு தெருவுக்குள் ஆடவர் ஓடிச் செல்வதையும் காணொளிகளில் காணமுடிகிறது. வெள்ளம் மோசமடைந்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளும்படி காவல்துறை நினைவூட்டியது.