உலகம் செய்தியில் மட்டும்
"மூடிவிடலாமா என்று யோசிக்கிறோம்" வருந்தும் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா கடைக்காரர்கள்

CNA/Fadza Ishak
கோலாலம்பூரின் மஸ்ஜித் இந்தியா (Masjid India) வட்டாரத்தில் பள்ளத்தில் விழுந்து காணாமற்போன பெண்ணைத் தேடும் பணிகள் 4ஆவது நாளாக இன்று (26 ஆகஸ்ட்) தொடர்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை (23 ஆகஸ்ட்) காலை 8.30 மணியளவில் அங்கு திடீரென 8 மீட்டர் ஆழமுள்ள பள்ளம் திறந்தது.
அந்த வழியே நடந்து சென்ற 48 வயது திருமதி விஜயலெட்சுமி குழியில் விழுந்தார்.
சுற்றுப்பயணிகளும் மலேசிய இந்தியர்களும் பொருள்கள் வாங்க மஸ்ஜித் இந்தியாவிற்கு வருவது வழக்கம்.
ஆனால் கடந்த சில நாள்களாய் நிலவரம் வேறு.
"கடைக்கு வெளியே அதிகாரிகள் கூடாரங்களை அமைத்துள்ளனர். தேடல் பணிகள் தொடர்வதால் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. அதனால் கடைக்கு யாராலும் வரமுடிவதில்லை," என்று மஸ்ஜித் இந்தியாவில் துணிக்கடை வைத்திருக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத கடைக்காரர் ஒருவர் 'செய்தி'யிடம் கூறினார்.
வாடிக்கையாளர்களிடம் கடையின் பின்வழியைப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் கூறுவதாக அவர் சொன்னார்.
அதனைக் கேட்கும் பொதுமக்கள் அந்த இடம் செல்வதற்கு பாதுகாப்பானதல்ல என்று கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
மூடிவிடலாமா என்று யோசிக்கும் கடைக்காரர்கள்
வாடிக்கையாளர்கள் அங்கு கார்களை நிறுத்தவும் இப்போது இடவசதி இல்லை என்று அங்கு நவரத்தின ஆலோசகராக பணிபுரியும் திரு ஜெயசீலன் சொன்னார்.
கடந்த வாரயிறுதியில் கடைகளுக்குக் மிகக் குறைவானோர் அல்லது யாருமே வரவில்லை என்று மஸ்ஜித் இந்தியாவில் கடைகளை வைத்திருப்போர் கூறினர்.
கடையை மூடிவிடலாமா என்று கடைக்காரர்கள் சிலர் யோசிக்கின்றனர்.
கிட்டத்தட்ட 60 விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காட்டு வரை வியாபாரம் குறைந்ததாக அவர்கள் கூறினர்.

குழி திறப்பது இது முதல் முறையல்ல
5 ஆண்டுகளுக்கு முன் சுமார் 10 மீட்டர் ஆழமுடைய பள்ளம் திறந்ததாக திரு ஜெயசீலன் சொன்னார்.
அண்மையில் 3 மாதங்களுக்கு முன் இன்னொரு பள்ளம் திறந்ததாக அவர் சொன்னார்.
ஆனால் அந்தக் குழிகளில் யாரும் விழவில்லை.
அவை தற்போதைய சம்பவ இடத்திலிருந்து கிட்டத்தட்ட 40 மீட்டர் தூரத்தில் திறந்ததாகத் திரு ஜெயசீலன் குறிப்பிட்டார்.

குழிகள் திறக்கும் இடங்களுக்குக் கீழ் நீர்க் குழாய்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அங்கு நீரோட்டம் மணலை அரிப்பதாகவும் அதனால் நடைபாதைகள் உள்வாங்குவதாகவும் திரு ஜெயசீலன் சொன்னார்.
கடந்த ஒரு வாரமாக மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தில் கடும் மழை பெய்ததால் குழி திறந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
மஸ்ஜித் இந்தியா வட்டாரம் பாதுகாப்பான இடம் என்று அதிகாரிகள் சொன்னாலும் மக்களிடையே அச்சம் நிலவுவதாகக் கடைக்காரர்கள் கூறுகின்றனர்.
காலப்போக்கில் அது சரியாகும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருக்கின்றனர்.