நஜிப் வீட்டுக்காவல் - இன்று முடிவு தெரியும்

மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் (Najib Razak) எஞ்சியிருக்கும் சிறைக்காலத்தை வீட்டுக்காவலில் செலவிடுவது குறித்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (6 ஜனவரி)முடிவெடுக்கப்படும்.
ஊழல் குறச்சாட்டுகளின் தொடர்பில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையில் மீதமுள்ள ஆறு ஆண்டுகளை அவர் வீட்டுக்காவலில் கழிக்க முறையீடு செய்திருந்தார்.
முன்னாள் மன்னர் அதற்கு அனுமதியளித்திருந்ததாய் நஜிப்பின் சட்டக் குழு கூறுகிறது.
அதற்கான புதிய ஆதாரத்தை அவரின் விண்ணப்பத்துடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நஜிப்பின் விண்ணப்பத்தைக் கோலாலம்பூர் நீதிமன்றம் நிராகரித்தது.
2022ஆம் ஆண்டில் சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 13.7 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) பெறுமானமுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் நஜிப்பிற்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
12 ஆண்டுச் சிறைத்தண்டனையுடன் சுமார் 46 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.
அரச மன்னிப்புக்கு நஜிப் முறையீடு செய்ததைத் தொடர்ந்து அவரின் சிறைத்தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டது. அவரின் அபராதமும் சுமார் 75 விழுக்காட்டுக்கு மேல் குறைக்கப்பட்டது.