Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

காதுக்குள் மூன்று நாள் குடியிருந்த கரப்பான்பூச்சி!

வாசிப்புநேரம் -

நியூஸிலந்தைச் சேர்ந்த 40 வயது ஆடவரின் காதில் கரப்பான்பூச்சி ஒன்று மூன்று நாள் இலவசமாகக் குடியிருந்தது!

40 வயது ஸேன் வெட்டிங் (Zane Wedding) ஆக்லந்தில் இருந்த நீச்சல் குளத்தில் நீந்தியபோது எப்படியோ அது அவரது காதிற்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது.

அவர் அங்கிருந்து வீட்டுக்குச் சென்றவுடன், காதில் ஏதோ அடைப்பு ஏற்பட்டதுபோல் உணர்ந்ததாக CNN செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

வெறும் அடைப்புதான் என்று எண்ணி காதில் மருந்து ஊற்றித் தூங்கிவிட்டார் அவர்.

மறுநாளன்று காலையிலும் காது அடைத்தே இருந்ததால், அவர் மருத்துவரைக் காணச் சென்றார்.

ஆரம்பத்தில் அவரது காதில் தண்ணீர்தான் புகுந்திருக்கும் என்று எண்ணிய மருத்துவர், ஸேனை வீட்டுக்குச் சென்று காதை, முடி உலர்த்தி (Hairdryer) கொண்டு காய வைக்கச் சொன்னார்.

ஸேன், 2 நாள்களுக்குக் காதை உலரச்செய்ய முயன்றும் பெரிய மாற்றமில்லை.

சிலநேரம், நடக்கும்போது மயக்கம் வருவதுபோல உணர்ந்தார்.

படுக்கும்போது காதுக்குள் தண்ணீர்த் துளி உருள்வதுபோல் தோன்றியதாகவும் அவர் சொன்னார்.

சற்று நேரம் கழித்து, திடீரென அவர் காதில் கேட்டுக்கொண்டிருந்த தண்ணீர்த் துளி உருளும் சத்தம் நின்றுபோனது.

ஆனாலும் காதில் இருந்த அடைப்பு நீங்கவில்லை.

தாமதிக்காமல் ஸேன் காது, மூக்கு, தொண்டை நிபுணரைக் காணச் சென்றார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர், யுரேகா யுரேகா என்று கத்தாத குறைதான்.

உங்கள் காதுக்குள் பூச்சி புகுந்திருக்கிறது என்று மருத்துவர் சொன்னதும் தூக்கிவாரிப் போட்டது ஸேனுக்கு.

ஐந்தே நிமிடத்துக்குள் ஸேனின் காதிலிருந்து, மாண்டுகிடந்த கரப்பான்பூச்சி அகற்றப்பட்டது.

முடி உலர்த்தியிலிருந்து அனுப்பப்பட்ட வெப்பக்காற்று, கரப்பான்பூச்சியைக் கொன்றுவிட்டதால் அது நகராமல் காதுக்குள் முடங்கியது.

அதனால்தான், தண்ணீர்த் துளி உருளும் உணர்வு நின்றாலும் அடைப்பு நீங்கவில்லை என்பதை உணர்ந்து இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் ஸேன்.

மனிதர்களுக்குத்தான் என்னென்ன பிரச்சினை எந்தெந்த வடிவில் வருகிறது!...

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்