Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மத்திய கிழக்கில் பூசல் ஏற்பட்டால் ஏன் எண்ணெய் விலை பாதிக்கப்படுகிறது?

வாசிப்புநேரம் -
ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல் மத்திய கிழக்கில் பெரும் போராக மாறி, எண்ணெய், எரிபொருள் விநியோகத்தில் இடையூறு செய்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

Brent, WTI இரண்டு எண்ணெய் ரகங்களின் விலையும் 5 விழுக்காடு வரை உயர்ந்தது.

கிட்டத்தட்ட ஓராண்டில் காணாத விலையேற்றம் அது.

மத்திய கிழக்கில் பூசல் ஏற்பட்டால் ஏன் எண்ணெய் விலை பாதிக்கப்படுகிறது? சில காரணங்கள் இதோ..

1) தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானை எச்சரித்த இஸ்ரேல்

ஹிஸ்புல்லா தலைவர் ஹசான் நஸ்ரல்லா (Hassan Nasrallah) கொல்லப்பட்டதற்காக ஈரான் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியதாக அண்மையில் கூறியிருந்தது.

அதற்குப் பதிலடி கொடுக்கப்படுமென இஸ்ரேல் ஈரானை எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் ஈரானின் சுத்திகரிப்பு, எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் நடத்தினால் உலக அளவில் எண்ணெய் விநியோகம் பாதிப்படையலாம்.

2) ஹோர்முஸ் (Hormuz) நீரிணை

உலகின் அதி முக்கியமான எண்ணெய் விநியோகச் சந்திப்பாக ஹோர்முஸ் நீரிணை கருதப்படுகிறது.

அது ஈரானுக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது.

ஈரானின் தாக்குதல்கள் ஹோர்முஸ் நீரிணையில் நிகழும் விநியோகத்தைப் பாதிக்கக்கூடும்.

ஒவ்வொரு நாளும் உலகின் கடல்துறை எண்ணெய் விநியோகத்தில் நான்கில் ஒரு பகுதிக்கும் மேல் அந்த வழியாகத்தான் விநியோகம் செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருள்கள் ஆகியவை அவற்றுள் அடங்கும்.

அப்படி இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே இருக்கும் பூசல் மோசமடைந்தால், ஈரான் அவ்வழியாகச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தலாம்.

ஹோர்முஸ் நீரிணையில் ஏதேனும் இடையூறு நேர்ந்தால் அனைத்துலக எண்ணெய் விநியோகத்திலும் எண்ணெய் விலையிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம்.

3) OPEC அமைப்பில் ஈரானும் ஓர் உறுப்பினர்

OPEC எனும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பில் உறுப்பினராக இருக்கும் ஈரான் பெரும்பாலான எண்ணெயைச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்கிறது.

ஈரானுக்கு எதிராக அனைத்துலகத் தடைகள் இருக்கின்றன.

ஈரான் அதன் எண்ணெய் ஏற்றுமதியைக் குறைத்துக்கொண்டால் அனைத்துலகச் சந்தைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று CNN தெரிவித்தது.

ஏனென்றால் மற்ற நாடுகளுடன் சேர்ந்து எண்ணெய்க்காகச் சீனாவும் போட்டியிட வேண்டியிருக்கும்.

விநியோகம்.. தேவை..

இவை இரண்டும் எண்ணெய் விலையைத் தீர்மானம் செய்கின்றன.

ஈரான் எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்போது எண்ணெயின் விநியோகம் குறைகிறது.

அதற்கான தேவை அதை நிலையில் இருந்தாலும் போதுமான எண்ணெய் இல்லாதபட்சத்தில் அதன் விலை உயர்கிறது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்