COVID-19 நோய்ப்பரவல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை: உலகச் சுகாதார நிறுவனம்

படம்: AFP
உலகச் சுகாதார நிறுவனம் COVID-19 நோய்ப்பரவல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்று எச்சரித்துள்ளது.
ஓமக்ரான் வகை மிதமான நோய்ப்பரவல் என வகைப்படுத்துவதைத் தவிர்க்கும்படி ஜெனீவாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேஸஸ் (Tedros Ghebreyesus) எச்சரித்தார்.
ஓமக்ரான் நோய்ப்பரவலின் தாக்கம் உலகெங்கிலும் உணரப்படுவதை அவர் சுட்டினார்.
ஓமக்ரானால் பாதிக்கப்படுவோருக்குக் கடுமையான நோய் இல்லை என்று காணப்படுவதால் COVID-19 நிரந்தர நோயாக உருமாறி இருக்கக்கூடும் என்ற விவாதம் எழுந்துள்ளது.
இருப்பினும் பெரிய அளவில் மக்கள் பாதிக்கப்படுவதால் இன்னும் பலர் கடுமையாக நோய்ப்படுவதாகவும் மடிவதாகவும் உலகச் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது.
சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புகள் மீதான நெருக்குதலை நீக்க அவசரத் தேவை இருப்பதாக டாக்டர் கேப்ரியேஸஸ் குறிப்பிட்டார்.
குறிப்பாகத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டோர் விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் அது அவசியம் என்று அவர் சொன்னார்.
தடுப்பூசிகளைச் சமமான முறையில் விநியோகம் செய்தால் மட்டுமே நோய்ப்பரவலை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று டாக்டர் கேப்ரியேஸஸ் மீண்டும் வலியுறுத்தினார்.