நாடாளுமன்றத்தில் இன்று என்ன நடக்கும்?
(படம்: Parliament of Singapore/ Facebook)
நாடாளுமன்றம் இன்று (5 நவம்பர்) மீண்டும் கூடுகிறது.
நாடாளுமன்றத்தில் முக்கியமாக என்ன பேசப்படும்?
- மேகன் குங் (Megan Khung) துன்புறுத்தல் விவகாரம்
4 வயதுச் சிறுமி சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் அமைப்புகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் பல குறைகள் இருந்ததாக அண்மையில் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டது.
அதன் தொடர்பில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சிடம் பல கேள்விகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர்.
- எல்லைகடந்த குற்றங்கள்
எல்லைகடந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் சிங்கப்பூரில் குடும்ப அலுவலகங்களை அமைத்திருந்தனரா என்ற கேள்வி எழுப்பப்படும்.
கம்போடிய மோசடிக் கும்பலுடன் சிங்கப்பூர்த் தரப்புகள் அண்மையில் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கேள்வி கேட்கப்படுகிறது.
- இணைய அச்சுறுத்தல்
இணைய அச்சுறுத்தல்களைக் கையாளக் கோரும் மசோதா குறித்து விவாதிக்கப்படும்.
- BTO வீடுகள்
தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் வீடுகள் விரைவாகக் கட்டி முடிக்கப்படும் நிலையில், குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள், தொடக்கப்பள்ளிகள், போக்குவரத்து இணைப்புகள், சமூக வசதிகள் போன்றவையும் துரிதப்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுப்பப்படும்.
- Nutri-Grade திட்டத்தின் தாக்கம்
Nutri-Grade எனும் ஊட்டச்சத்து ஒட்டுவில்லை நடைமுறையின் தாக்கம் குறித்துப் பேசப்படும்.
சிங்கப்பூரில் அணுவாயுதம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வது குறித்துத் துணைப்பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங்கிடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.