Kalmaegi சூறாவளி: வெள்ளத்தால் 90க்கும் அதிகமானோர் மரணம்
பிலிப்பீன்ஸில் வீசிய கால்மேகி (Kalmaegi) சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 90 பேர் மாண்டனர்.
சிபூவில் (Cebu) மட்டும் மாண்டோரின் எண்ணிக்கை 76 என்று AFP நிறுவனம் தெரிவித்தது.
"இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. சூறாவளியே அதிக ஆபத்தைக் கொண்டிருக்கும் என்று எண்ணினோம். ஆனால் மக்கள் நீரால்தான் ஆபத்தைச் சந்திக்கின்றனர்," என்று உள்ளூர் ஆளுநர் பமேலா பரிக்குவாட்ரோ (Pamela Baricuatro) சொன்னார்.
கார்கள், லாரிகள், கப்பல் கொள்கலன்கள் உள்ளிட்டவற்றை வெள்ளம் அடித்துச் சென்றது.
தற்போது வெள்ளம் தணிந்துள்ளது. சாலைகளை மறிக்கும் இடிபாடுகளை அகற்றுவது முக்கிய சிக்கலாகக் கருதப்படுகிறது.
கால்மேகி சூறாவளி வீசுவதற்கு முதல்நாள் 182 மில்லிமீட்டர் அளவில் மழை பதிவானது.
அது சராசரி அளவான 131 மில்லிமீட்டரைவிட மிக அதிகம் என்று வானிலை நிபுணர் ஒருவர் கூறினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சூறாவளி கடக்கவிருந்த பாதையில் வசித்த சுமார் 400,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.