Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம் செய்தியில் மட்டும்

ஜொகூர் பாரு லிட்டில் இந்தியாவில் தோரணத்தின் விலை உயர்வுக்கு மழை காரணமா?

வாசிப்புநேரம் -
ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் திருநாளின்போது ஜொகூர் பாரு லிட்டில் இந்தியா கடைகளில் கணிசமான தோரணங்கள் விற்பனையாகி வருகின்றன.

இம்முறையும் தோரணங்களின் விற்பனை சூடுபிடித்திருக்கிறது என்றாலும் மக்களிடையே அதன் விலை குறித்துப் பலவேறு கருத்துகள் எழுகின்றன.
 
நளினி (படம்: லொவிஷீனா)

“நான் இம்முறை தோரணம் வாங்கவில்லை. 9 தோரணத்தை 15 ரிங்கிட்டுக்கு விற்கிறார்கள். எனக்கு இது நியாயமான விலையாகப் படவில்லை. அதனால் இம்முறை வாங்க வேண்டாம் எனத் தீர்மானித்து விட்டேன்” என்று ஜொகூரைச் சேர்ந்த நளினி செய்தியிடம் கூறினார்.

விலையேற்றத்திற்கான காரணம் தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

ஜொகூர் பாரு லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள பல கடைகள் அதே விலையில்தான் தோரணங்களை விற்பதாக அவர் சொன்னார்.

வருடத்திற்கு ஒருமுறை வரும் பொங்கலுக்கு விலை பார்ப்பதில்லை என்கிறார் திருமதி கணேஷ்.

திருமதி கணேஷ் (படம்: லொவிஷீனா)
“பொங்கல் என்றால் நிச்சயம் தோரணம் கட்ட வேண்டும். அப்போதுதான் வீடே களைகட்டும். அதனால் விலை எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. பாரம்பரியத்தைக் கட்டிக்காட்ட வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக இருக்கிறது. பிளாஸ்டிக் தோரணங்கள் இதைவிட மலிவு, வாடாது. ஆனால் அதில் இயற்கையின் வாசம் இருக்காது. பொங்கல் இயற்கையின் திருநாள். அதனால் மகிழ்ச்சியாக விலை கொடுத்து வாங்கிச் செல்கிறோம்” என்றார் திருமதி கணேஷ்.

சிங்கப்பூரைச் சேர்ந்த முத்துகுமார் தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் ஜொகூருக்கு வந்து பொங்கல் பொருள்களை வாங்கிச் செல்கிறார்.

சுமார் 13 ஆண்டுகளாகப் பொங்கலுக்கு வேண்டிய பொருள்களை ஜொகூரிலேயே வாங்கிச் செல்வதாக அவர் சொன்னார்.
திரு முத்துகுமார் (படம்: லொவிஷீனா)
தோரணம் உட்பட சில பொருள்களின் விலை கூடியுள்ளதை அவர் சுட்டினார்.

மழை அதற்குக் காரணமாக இருக்கலாம் என்றார் அவர்.

இதற்கிடையில் ஜொகூரில் பூவியாபாரம் செய்து வரும் ரஜினி கண்ணன் தம்முடைய கடையில் தோரணம் ஒன்று ஒரு ரிங்கிட்டிற்கு விற்கப்படுவதாகத் தெரிவித்தார்.
திரு ரஜினி கண்ணன் (படம்: லொவிஷீனா)
சில கடைகளில் தோரணம் விலை அதிகமாக விற்கப்படுவது குறித்துத் தமக்கு தெரியாது என்று கூறியவர், மழைக் காலத்தில் தென்னம் ஓலைகளை வெட்டுவதில் உள்ள சிரமத்தை செய்தியோடு பகிர்ந்து கொண்டார்.

"சில நேரம் நம் கண்ணுக்குத் தெரியும் தென்னை ஓலையை வைத்து விலையை நியாயப்படுத்த முயலுவோம். ஆனால் அதன் பின்னால் உள்ள வேலைப்பழு, செலவழிக்கப்படும் நேரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார் அவர்.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்