Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்: அதிபர் தர்மன்

வாசிப்புநேரம் -
இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்: அதிபர் தர்மன்

(படங்கள்: மீனா ஆறுமுகம்)

இந்தியா வெவ்வேறு கலாசாரங்களைக் கொண்ட நாடு; அதன் வேறுபாடுகளே அதன் பலம்; அதில் ஈடுபாடு காட்டவேண்டும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியிருக்கிறார்.
 
புதுடில்லி சென்றிருக்கும் அதிபர் தர்மன் நேற்றிரவு அங்குள்ள சிங்கப்பூரர்களைச் சந்தித்தார். சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டையும் இந்தியா சிங்கப்பூர் உறவின் 60 ஆண்டு நிறைவையும் குறிக்கும் கொண்டாட்டமாக அது அமைந்தது.

வர்த்தகர்கள், கல்விமான்கள், நிபுணர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள், இல்லத்தரசிகள் என்று பலதரப்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆவலுடன் வந்திருந்தனர்.
அதிபர் தர்மனுடன், அவரது துணைவியார், போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட், வெளியுறவு மூத்த துணையமைச்சர் சிம் ஆன் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தற்போதுள்ள துறைகளில் கூட்டு முயற்சிகளை அதிகரிப்பது மட்டுமின்றி புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் சிங்கப்பூரும் இந்தியாவும் ஆர்வம் காட்டுவதாக அதிபர் சொன்னார்.

‘Sustainability” எனும் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் முயற்சிகள் இரு நாடுகளுக்கும் முக்கியம். அதில் கூட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் அவர்.

இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அதிபர். சென்ற முறை அஸ்ஸாம் மாநிலத்துக்குச் சென்றதையும், இம்முறை ஒடிஷா செல்லவிருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் இந்திய உறவு இரு தரப்பும் ஒன்று மற்றொன்றிடமிருந்து கற்றுக்கொள்ளும் உறவாக இருக்கும் என்றார் திரு தர்மன்.
 

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிங்கப்பூர்களுக்கு, இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் சக சிங்கப்பூரர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர்களுடன் கலந்துறவாட நிகழ்ச்சி சிறந்த வாய்ப்பளித்ததாக அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் சுமார் 150 பேர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் பிரபல உணவுகள் இரவு உணவாக வழங்கப்பட்டன.

 
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்