முதியவர்களின் மூளை அதிர்ச்சியைக் கண்டறிய புதிய ரத்தப் பரிசோதனை
முதியவர்களுக்கு ஏற்படக்கூடிய மூளை அதிர்ச்சியைக் (Concussion) கண்டுபிடிக்க புதிய ரத்தப் பரிசோதனை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக (Monash University) ஆராய்ச்சியாளர்கள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்படும்போது மூளையில் அதிர்ச்சி ஏற்படும் ஆபத்து அதிகம்.
ஆய்வில், மூளை அதிர்ச்சிக்கு ஆளான 60 முதல் 84 வயதுடைய நோயாளிகளின் ரத்தப் பிளாஸ்மாவில் 'ஜி.எஃப்.ஏ.பி' எனப்படும் புரதத்தின் (GFAP - Glial Fibrillary Acidic Protein) அளவு அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக முதியவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி, சோர்வு, கவனக்குறைவு போன்ற முதுமைக்கால அறிகுறிகளால் மூளை அதிர்ச்சியைத் துல்லியமாகக் கண்டறிவதில் சிக்கல் நீடிக்கும்.
ஆனால் இந்த 'ஜி.எஃப்.ஏ.பி' புரதம் ஒரு நம்பகமான,துல்லியமான ஆதாரமாக விளங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
விபத்துக்குள்ளான முதியவர்கள் சுயநினைவை இழப்பதாலோ மறதியினாலோ தங்களுக்கு நடந்தவற்றை விவரிக்கமுடியாத சூழலில் இப்புதிய ரத்தப் பரிசோதனை பேருதவியாக இருக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.