Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம் செய்தியில் மட்டும்

"எப்படி இவ்வளவு தூரம் வந்தேன் என்று தெரியவில்லை" - சரிகமப புகழ் அருளினி

வாசிப்புநேரம் -
மலேசியாவைச் சேர்ந்த 22 வயதுப் பாடகி அருளினி அஷ்வினா ஆறுமுகம். குறுகிய காலத்தில் சிங்கப்பூர், இந்தியா, இலங்கை என்று தமிழர்கள் வாழும் பல நாடுகளில் பிரபலமடைந்துவிட்டார்.

அதற்குக் காரணம் இசை.

இந்தியாவின் மிகப் பெரிய பாடல் போட்டிகளில் ஒன்றான Zee தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியின் போட்டியாளராக அருளினி இருக்கின்றார்.
(படம்: Instagram/thejourneyofarulini)
'Autism' தொடர்புத் திறன்குறைபாடு இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் அவர் காட்டி வரும் திறமை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

அருளினியிடம் பேசியது 'செய்தி'.
(படம்: Facebook/Arulini Ashwiinaa Arumugam)
"8 வயதில் பள்ளிக்கூடப் பரிசளிப்பு விழாவில் முதல்முறையாக மேடையேறிப் பாடினேன். 'அனல் மேலே பனித்துளி' என்பதுதான் எனது முதல் பாடல்."
 
(படம்: Facebook/Arulini Ashwiinaa Arumugam)
சரிகமப அனுபவம்.....

"முயற்சி செய்துபார்க்கலாம் என்றுதான் தேர்வுச் சுற்றுக்குச் சென்றேன். ஆனால் எப்படி இவ்வளவு தூரம் வந்தேன் என்று தெரியவில்லை. இது அதிசயம். ஒவ்வொரு சுற்றிலும் புதிய அனுபவம். திறமையை வளர்த்துக் கொள்ள நிறையக் கற்றுக்கொள்கிறேன்" என்றார் அருளினி.

பிடித்த பாடகர் பிரதீப் குமார், பிடித்த இசையமைப்பாளர் ஜிப்ரான் என்று கூறும் அருளினி தமது மிகப் பெரிய ஆசையையும் பகிர்ந்துகொண்டார்.

"இசை, பாடல் வழி மக்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். முடிந்தால் தொடர்புத்திறன் குறைபாடுள்ள பிள்ளைகளுக்குத் தனியொரு மேடையை அமைத்துக் கொடுக்க வேண்டும்".

பாட்டுத் துறை மட்டும் இன்றி வருங்காலத்தில் நாடகத்துறையிலும் ஈடுபட விருப்பம் கொண்டுள்ளார் அருளினி. முனைவர் பட்டம் பெறும் வரை படிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
 
(படம்: கஸ்தூரி)
அருளினிக்குத் தொடர்புத்திறன் குறைபாடு இருப்பது 3 வயதில் தெரியத் தொடங்கியதாக அவரது தாயார் திருமதி கஸ்தூரி சொன்னார்.
 
(படம்: கஸ்தூரி)
"ஆனால் எந்தப் பாட்டைக் கேட்டாலும் அதனை அப்படியே இசை மாறாமல் முணுமுணுக்கும் திறன் அவரிடம் இருந்தது. அதற்கேற்ப அவரைத் தயார்ப்படுத்தத் தொடங்கினேன்" என்றார் ஆசிரியருமான திருமதி கஸ்தூரி.
 
(படம்: Facebook/Khasturi Ramalingam)
இந்தியாவுக்குச் சென்று பாட்டுப் பாட வாய்ப்புக் கிடைத்ததும் அருளினியை எப்படித் தனியாக அனுப்புவது என்று யோசித்ததாகவும் ஆனால் அங்கிருந்த தோழி தமக்கு உதவியதாகவும் திருமதி கஸ்தூரி கூறினார்.

"தொடர்புத்திறன் குறைபாடு உள்ள பிள்ளைகளைக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் முயற்சி, பயிற்சி, தொடர்ச்சி எனும் அணுகுமுறையைப் பின்பற்றினால் எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதிலிருந்து பிள்ளைகளை மீட்டுக் கொண்டுவர முடியும்" என்று நம்பிக்கை கொடுத்தார் அவர்.
 
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்