"எந்த முடிவு எடுத்தாலும் தென் கொரிய அதிபர் யூன் அதை ஏற்றுக்கொள்வார்" - யூனின் வழக்கறிஞர்கள்

(கோப்புப் படம்: REUTERS/Kim Hong-Ji/Pool)
தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலின் (Yoon Suk Yeol) வழக்கறிஞர்கள், அரசமைப்புச் சட்ட நீதிமன்றம் அவரின் பதவி நீக்கம் குறித்து எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள அவர் தயார் என்று கூறியிருக்கின்றனர்.
அந்த முடிவு, பதவி விலகல் என்றாலும் அதைத் திரு யூன் ஏற்பார் என்று சொல்லப்பட்டது.
தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்யப்பட்ட திரு யூன் மீதான கைதாணையை ரத்துச் செய்ய அவரின் வழக்கறிஞர்கள் புதிய தடை உத்தரவுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
திரு யூனைத் தடுத்து வைப்பது உலக அளவில் தென் கொரியாவின் நிலையைப் பாதிக்கக்கூடும் என்று அவரின் வழக்கறிஞர் சொன்னார்.
திரு யூன் தற்போது வீட்டில்தான் உள்ளார் என்று கூறிய அவர் வளாகத்தைச் சுற்றித் தடுப்புகள் வைக்கப்பட்டுளதாகக் கூறினார்.
அதிகாரிகளுடன் கைகலப்பு நடப்பதைத் தவிர்க்க அவ்வாறு செய்யப்பட்டதாக வழக்கறிஞர் சொன்னார்.
இந்நிலையில் தடுப்புகளை மீறியாவது திரு யூனைக் கைதுசெய்ய முயற்சி எடுக்கப்படும் என்று தலைமை விசாரணை அதிகாரி ஒருவர் கூறினார்.