உற்சாகத்தின் உச்சத்தில் ஸ்பெயின் - பிரமாண்ட வெற்றிக் கொண்டாட்டம்
படம்: AP Photo/Bernat Armangue
This audio is generated by an AI tool.
உலகக் கிண்ணத்தை வென்று திரும்பிய ஸ்பெயின் ஆட்டக்காரர்களுக்குத் தலைநகர் மட்ரிட்டில் (Madrid) பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.
கிட்டத்தட்ட 2 மில்லியன் பேர் அங்கு திரண்டனர்.
ஸ்பெயின் அணியின் 26 ஆட்டக்காரர்களும் பயிற்சியாளர்களும் முதலில் அரசக் குடும்பத்தினரைச் சந்தித்தனர்.
பின்னர் பிரதமர் பெட்ரோ சான்செஸைச் (Pedro Sanchez) சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அதன்பிறகு கூரையில்லாப் பேருந்தில் ஸ்பெயினின் வெற்றி ஊர்வலம்.
ஒற்றுமையை உணர்த்தும் வகையில் பேருந்தில் Stars shine together என்ற வாசகமும் ஆட்டக்காரர்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன.
உலகக் கிண்ணத்தைக் கையில் ஏந்திய வீரர்கள், Somos Campeones அதாவது We Are Champions என்ற வாசகம் அச்சிடப்பட்ட சட்டைகளை அணிந்திருந்தனர். வழியெங்கும் ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்து ஆடி மகிழ்ந்தனர்.
ஊர்வலத்தின் நிறைவு விழா சிபெலெஸ் (Cibeles) சதுக்கத்தில் நடந்தது. அங்கு சுமார் 120,000 பேர் திரண்டிருந்தனர்.
ஆட்டக்காரர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டு அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். அணியில் 25ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் அலெக்ஸ் பைன (Álex Baena) 2026 உலகக் கிண்ணத்தை ஏந்தியவாறு மேடைக்கு வந்தார்.
இசைக்கலைஞர்கள் பாடல்களுடன் அனைவரையும் மகிழ்வித்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் ஸ்பெயின் ஆட்டக்காரர்கள் மீண்டும் உலகக் கிண்ணத்தை உயர்த்திப் பிடித்துச் சொந்த மண்ணில் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
திங்கட்கிழமை நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு வெற்றியாளர் அர்ஜென்ட்டினாவை வீழ்த்தியது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு கிண்ணத்தைக் கைப்பற்றியது.