களவாடிய வைரத் தோடுகளை விழுங்கிய சந்தேக நபர்

AP/Orlando Police Department office
நகைக் கடையிலிருந்து வைரத் தோடுகளைக் களவாடிய ஆடவர் அவற்றை விழுங்கிவிட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த வாரம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருக்கும் Tiffany & Co கடையிலிருந்து தோடுகள் திருடப்பட்டன.
பிரமுகர் ஒருவரின் சார்பில் நகை வாங்குவதாகச் சந்தேக நபர் ஊழியர்களிடம் கூறினார்.
அவர் சிறப்பு வாடிக்கையாளர்களுக்கான அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு ஆடவருக்கு வைரத் தோடுகளும் மோதிரமும் காட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
அவர் ஊழியரிடமிருந்து நகைகளைப் பிடுங்கிவிட்டுத் தப்பிக்க முயன்றார்.
ஊழியர் ஆடவரின் கைகளிலிருந்து மோதிரத்தைத் தட்டிவிட்டாலும் சந்தேக நபர் தோடுகளுடன் ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் பின்னர் சந்தேக நபரை அடையாளம் கண்டனர்.
32 வயது ஆடவர் டெக்சஸுக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் பிடிபட்டார்.
அவர் தோடுகளை விழுங்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
ஆடவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஊடுகதிர் (X-ray) பரிசோதனையின்போது தோடுகள் வயிற்றுப் பகுதியில் காணப்பட்டன.
அவர் மீது பின்னர் குற்றஞ்சாட்டப்பட்டது.
அதிகாரிகள் தற்போது தோடுகளை மீட்கக் காத்திருக்கின்றனர்.