வெயிலில் உருகும் சுவிட்சர்லந்துப் பனிப்பாறைகள்
(படம்: AFP)
This audio is generated by an AI tool.
ஐரோப்பாவைத் தாக்கியுள்ள கடும் வெப்ப அலையால் சுவிட்சர்லந்தில் பனிப்பாறைகள் இந்த ஆண்டும் மிக வேகமாக உருகுகின்றன.
சுவிட்சர்லந்துப் பனிப்பாறைக் கண்காணிப்பு அமைப்பு (GLAMOS) அதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த குளிர்காலத்தில் தேங்கிய பனியும் பனிக்கட்டியும் திங்கள்கிழமைக்குள் முழுவதும் உருகிவிடும் என்று அந்த அமைப்பின் தலைவர் மத்தியாஸ் ஹுஸ் (Matthias Huss) கூறினார்.
2000 முதல் பதிவான தரவுகளின்படி, இந்த நிலை இரண்டாவது முறையாக இவ்வளவு முன்கூட்டியே ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன் 2022 ஜூன் 26ஆம் தேதி மட்டுமே இது இன்னும் முன்னதாக பதிவானது.
தற்போதைய வெப்ப அலை, மே மாத வெப்பம், கடந்த குளிர்காலத்தில் குறைவாகப் பெய்த பனிப்பொழிவு ஆகியவை இதற்குக் காரணம்.
வழக்கமான நிலையைவிட மூன்று மாதங்கள் முன்னதாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது,
2000ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை சுவிட்சர்லந்தின் பனிப்பாறைகளின் மொத்த அளவு 38 விழுக்காடு குறைந்துள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் 1,200 பனிப்பாறைகள் முற்றிலும் மறைந்துவிட்டன.
தற்போது சுமார் 1,300 பனிப்பாறைகள் மட்டுமே உள்ளன.
தற்போதைய வெப்பமயமாதல் தொடர்ந்தால் 2100ஆம் ஆண்டுக்குள் சில சிறிய பனிப்பகுதிகள் மட்டுமே எஞ்சும் என்று எச்சரிக்கப்பட்டது.