கெந்திங் ஹைலண்ட்ஸில் 3 வாகனங்கள் விபத்து - விரைவுப் பேருந்து கவிழ்ந்தது
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: Facebook/Qamarul Asyraf
மலேசியாவின் கெந்திங் ஹைலண்ட்ஸ் (Genting Highlands) சாலையில் நடந்த விபத்தில் 7 பேர் காயமுற்றனர்.
இரண்டு விரைவுப் பேருந்துகளும் ஒரு காரும் விபத்தில் சிக்கின.
கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் சாலையில் விபத்து நடந்தது.
விபத்தில் முதல் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து காரை மோதிப் பின்னர் மற்றொரு விரைவுப் பேருந்தை மோதியது.
கட்டுப்பாட்டை இழந்த இரண்டாவது பேருந்து சாலையின் இடதுபுறத்தில் கவிழ்ந்தது.
முதல் பேருந்து வலப்புறச் சாலையில் தடுப்பை மோதியது.
இரண்டு பேருந்துகளிலும் மொத்தம் 74 பயணிகள் இருந்தனர்.
சிலாங்கூர் மாநிலத்தின் தொழிற்சாலையில் வேலைசெய்யும் அந்நிய நாட்டவர்களும் பேருந்தில் பயணம் செய்தனர்.
அவர்கள் கெந்திங் ஹைலண்ட்ஸில் சுற்றுலா முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
விபத்துக்கு முதல் பேருந்து ஓட்டுநரே காரணம் என்பது ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அவர் கவனமில்லாமல் வாகனமோட்டியதாக நம்பப்படுகிறது.
விசாரணைக்காக அந்த 55 வயது ஆடவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு சாலைக் குற்றங்களுக்காக அவர் மீது 29 குற்றப்பதிவுகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை.
மூன்று பங்களாதேஷ் நாட்டவர்கள், இரண்டு நேப்பாள நாட்டவர்கள், மலேசியர் என 6 பேர் காயமுற்றனர்.
சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.