ஈராண்டுத் தடைக்குப் பின் Facebook, Instagramஇல் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் சேர்ந்துகொள்ளலாம்

Meta நிறுவனம், அதன் Instagram, Facebook தளங்களில் அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் மீண்டும் சேர்ந்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
அவர் அந்தத் தளங்களில் "புதிய கட்டுப்பாடுகளுடன்" சேர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனம் சொன்னது.
2021இல் அமெரிக்காவில் Capitol கட்டடம்மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்துத் Meta நிர்வகிக்கும் சமூக ஊடகத்தளங்களிலிருந்து திரு டிரம்ப் தடை செய்யப்பட்டார்.
அந்நேரத்தில் அவர் தளங்களின் கோட்பாடுகளை மீறியிருந்ததாகக் கூறப்பட்டது.
ஈராண்டுக்குப் பின் தளங்களில் மீண்டும் சேரலாம் என்ற செய்தி கிடைத்தவுடன், 76 வயது வர்த்தக ஜாம்பவானான திரு டிரம்ப்,
"தளத்தில் நான் இல்லாமல் Facebook பில்லியன் கணக்கான டாலர் இழப்பைச் சந்தித்தது"
என்று அவரே நிர்வகிக்கும் Truth Social சமூகத்தளத்தில் கூறியிருந்தார்.
தடை செய்யப்பட்டதற்கு முன்பு திரு டிரம்ப்பின் Meta சமூகத்தளங்களிலில் சுமார் 34 மில்லியன் பேர் சேர்ந்திருந்தனர்.