டிரம்ப் வழக்கில் தண்டனை விதிக்கப்படும்
அமெரிக்க உச்ச நீதிமன்றம் திரு டோனல்ட் டிரம்ப் (Donald Trump) செய்திருந்த மனுவை நிராகரித்திருக்கிறது.
உண்மையை மறைக்க ஆபாசப் பட நடிகை ஒருவருக்குப் பணம் கொடுத்ததற்காக அவருக்கு இன்று (10 ஜனவரி) தண்டனை விதிக்கப்படவுள்ளது.
அதனைத் தாமதப்படுத்தத் திரு டிரம்ப் விண்ணப்பம் செய்திருந்தார்.
திரு டிரம்ப் இன்னும் 10 நாள்களில் மீண்டும் அதிபராகப் பதவியேற்கவுள்ள நிலையில் நியூயார்க் நீதிமன்றம் இன்று அவருக்குத் தண்டனை விதிக்கவிருக்கிறது.
வர்த்தகப் பதிவுகளில் முறைகேடு செய்ததாகக் கொண்டுவரப்பட்ட 34 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனக் கடந்த ஆண்டு மே மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.
தண்டனையைத் தள்ளிவைக்க அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதிகாரத்துவ நிலையில் செயல்பட்டிருந்தால் முன்னைய அதிபர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் முன்னைய கருத்தை அவர்கள் சுட்டினர்.
ஆனால் நீதிபதிகள் ஐந்துக்கு நான்கு என்ற வாக்கு வித்தியாசத்தில் மனுவை நிராகரித்தனர்.