சன்னல் வழியாக குதித்த மாணவர்கள்- துருக்கியே பள்ளியில் பயங்கரம்
(படம்: Orhan ERKILIC / AFP)
This audio is generated by an AI tool.
துருக்கியே (Turkiye) பள்ளி ஒன்றில் ஐந்து துப்பாக்கிகளை ஏந்திய 14 வயது இளையர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டிருக்கிறார்.
சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர், 13 பேர் காயமடைந்தனர். காயமுற்றோரில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சம்பவம் நேற்று (ஏப்ரல் 15) கஹ்ராமன்மராஸ் (Kahramanmaras) என்ற நகரில் நடந்தது.
தாக்குதல் நடத்தியவர் எட்டாம் வகுப்பு மாணவர் என்று துருக்கியே உள்துறை அமைச்சர் கூறினார். மாணவர் 2 வகுப்பறைகளுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மாநில ஆளுநர் தெரிவித்தார்.
சம்பவம் நடந்ததை விவரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது. அந்த ஒன்றரை நிமிடக் காணொளியில் மாணவர்கள் சன்னலிலிருந்து குதித்துத் தப்பிக்க முயல்வதைக் காண முடிகிறது.
தாக்குதல் நடத்திய பிறகு இளையர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மாண்டார். இளையரின் பெற்றோரை காவல்துறை தடுத்துவைத்துள்ளது.
துருக்கியேவில் ஒரே வாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட இரண்டாவது சம்பவம் இது. அந்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது மிக அரிது.
துருக்கியேவில் துப்பாக்கிகளை வைத்துக்கொள்வதற்கு கடுமையான சட்டங்கள் உள்ளன. சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருப்போருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.