Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதல் - தொலைபேசி அழைப்பு நேரம் மாற்றப்பட்டதா? நடந்தது என்ன?

வாசிப்புநேரம் -
சென்ற ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்த விவரங்களை இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகத்தின் நிர்வாகத் தலைவரான திரு ஸாச்சி பிரேவர்மேன் (Tzachi Braverman) மாற்றியதாகக் கூறப்படுகிறது.

அதன் தொடர்பில் காவல்துறை அவர் மீது விசாரணை நடத்துகிறது.

அந்தச் சம்பவத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் மாண்டனர்.

நடந்தது என்ன?

ஹமாஸ் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது திரு நெட்டன்யாஹுவுக்கு இரு தொலைபேசி அழைப்புகள் வந்ததாகக் கூறப்படுகிறது.

திரு பிரேவர்மேன் 6.40 மணிக்கு வந்த இரண்டாவது அழைப்பை 6.29 மணி என்று மாற்றியதாகச் சொல்லப்படுகிறது.

ராணுவத் தலைவர் ஏவி கில் (Avi Gil) ஹமாஸ் தாக்குதல் தொடங்கியவுடன் 6.29க்கு திரு நெட்டன்யாஹுவை அழைத்ததாகவும், அப்போது அவர் எந்த ஆணையும் கொடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

மாறாக பத்து நிமிடம் கழித்து அழைக்கும்படி திரு நெட்டன்யாஹு சொல்லியதாக இஸ்ரேலிய நாளிதழ் ஒன்றின் அறிக்கை சொல்கிறது.

இரண்டாவது அழைப்பு 6.40 மணிக்கு வந்தபோது தான் திரு நெட்டன்யாஹு கில்லிடம் சம்பவத்தை மதிப்பிடச் சொன்னார் என்று அறிக்கை சொல்கிறது.

ஆனால் திரு பிரேவர்மேன் இரண்டாவது அழைப்பின் நேரத்தை 6.29 என்று மாற்றியதாகச் சொல்லப்படுகிறது.

மாற்றக் காரணம்?

திரு நெட்டன்யாஹு உடனடியாக முடிவெடுத்ததைக் காட்டும் நோக்கத்தில் திரு பிரேவர்மேன் அழைப்புகளின் நேரத்தை மாற்றியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

திரு பிரேவர்மன் அழைப்பு குறித்த எந்த விவரங்களையும் மாற்றி எழுதவில்லை என்று கூறுகிறார்.

சென்ற வியாழக்கிழமை இஸ்ரேலியக் காவல்துறை 5 மணி நேரத்திற்கும் மேல் அவரை விசாரித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டன.

அக்டோபர் 7ஆம் தேதி நடந்த தாக்குதல் இஸ்ரேலின் வரலாற்றில் ஆகப்பெரிய தோல்வியாகக் கருதப்படுகிறது. அதன் தொடர்பில் பல உயர் ராணுவ அதிகாரிகள் வேலையிலிருந்து விலகியுள்ளனர்.

திரு நெட்டன்யாஹு அதற்குத் தாம் பொறுப்பில்லை என்று பலமுறை சொல்லியிருக்கிறார்.

சிலர் தாக்குதல் நடந்ததைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அதற்கு அவரே முக்கியக் காரணம் என்றும் நம்புகின்றனர்.

பல விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்