உலகம் செய்தியில் மட்டும்
"கன்சர்வேடிவ் கட்சி மீது மக்கள் கொண்ட அதிருப்தி தொழிற்கட்சிக்குச் சாதகமாக அமைந்தது"
பிரிட்டன் பொதுத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
எதிர்க்கட்சியான தொழிற்கட்சி தற்போது முன்னிலையில் உள்ளது.
தொழிற்கட்சியிடம் தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கிறார் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் ரிஷி சுனாக்.
கருத்துக்கணிப்புகளும் தொழிற்கட்சிக்குச் சாதகமாகவே இருந்தன. கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்வி தேர்தலுக்கு முன்னரே கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இதன் பின்னணியில் உள்ள காரணங்களைப் பகிர்ந்துகொண்டார் பிரிட்டனில் இருக்கும் வழக்கறிஞரும் அரசியல் கவனிப்பாளருமான திரு G.S குமார்.
"கன்சர்வேடிவ் கட்சி வரலாறு காணாத இழப்பைச் சந்திக்கலாம்"
தற்போதைய பிரதமர் ரிஷி சுனாக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியின் 14 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருகிறது.
"மந்தமான பொருளாதார வளர்ச்சி, நிறுவனங்கள் மீது குறைந்துவரும் நம்பிக்கை, மோசமடைந்து வரும் சமூகக் கட்டமைப்பு -இவை தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்வியை உறுதி செய்துவிட்டன. திரு கியர் ஸ்டாமர் (Keir Starmer) தலைமையிலான தொழிற்கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கணிக்கப்பட்டுவிட்டது," என்றார் அவர்.
"கன்சர்வேடிவ் கட்சி மீது மக்கள் கொண்ட அதிருப்தி தொழிற்கட்சிக்குச் சாதகமாக அமைந்தது"
ஒரே ஆண்டில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த மூவர் பிரதமர்களாகப் பொறுப்பேற்றனர்.
சர்ச்சையில் சிக்கிய முன்னையப் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகினார்.
அதன் பின்னர் பொறுப்பேற்று 44 நாள்களிலேயே திருவாட்டி லிஸ் டிரஸ் (Liz Truss) பதவி விலகினார்.
கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமைத்துவப் போட்டியில் பின்னர் திரு ரிஷி சுனாக் வென்று பிரதமரானார்.
அந்த மாற்றங்கள் மக்களிடையே பெருமளவில் அதிருப்தியை உண்டாக்கியது. கன்சர்வேட்டிவ் கட்சி நிலையற்றது என்ற எண்ணத்தை விதைத்துவிட்டது என்று திரு குமார் 'செய்தி'யிடம் தெரிவித்தார்.
"தொழிற்கட்சி என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டுவரும் என்பது கேள்விக்குறிதான்"
கன்சர்வேடிவ் கட்சி பொருளாதார ரீதியாகப் பல மாற்றங்களைக் கொண்டுவந்த போதிலும் அது பல தவறுகளைச் செய்திருக்கிறது.
தொழிற்கட்சியினால் அதனைச் சரிசெய்ய முடியுமா? அதனால் மக்களுக்குப் பலனளிக்கும் வகையில் மாற்றங்களைக் கொண்டு வர இயலுமா?
இது போன்ற கேள்விகள் மக்களின் மனத்தில் நிலவுவதாகத் திரு குமார் குறிப்பிட்டார்.
இருப்பினும் பிரிட்டன் மக்கள் மாற்றத்தை விரும்புவதை முடிவுகள் காட்டுவதாகத் திரு குமார் பகிர்ந்துகொண்டார்.