Skip to main content
'நீண்ட விடுமுறை வீணானது'
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் exclusive

'நீண்ட விடுமுறை வீணானது' - வட அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்

வாசிப்புநேரம் -
'நீண்ட விடுமுறை வீணானது' - வட அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்

படம்: Adam Glanzman/Getty Images/AFP

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையும் புத்தாண்டும் ஒவ்வோர் ஆண்டும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்த விடுமுறைக் காலத்தில் மக்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களைச் சந்திப்பது, சுற்றுலா செல்வது எனப் பல்வேறு திட்டங்களை வைத்திருப்பது வழக்கம்.

ஆனால், கடந்த வாரம் வியாழக்கிழமை முதல் அமெரிக்காவையும் கனடாவையும் புரட்டிப்போட்ட எலியட் பனிப்புயலால் இந்த நாடுகளைச் சேர்ந்த சுமார் 25 கோடி மக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டுள்ளனர். 

புயலின் பாதிப்பால், அமெரிக்காவில் மட்டும் இதுவரை குறைந்தது 60 பேர் உயிரிழந்துவிட்டனர். சில இடங்களில் வெப்பநிலை உறைநிலைக்குக் கீழ் 40 டிகிரி செல்ஸியஸைத் தொட்டது. 

snow_2

“இந்தப் பனிப்புயல் இதுவரை நான் பார்த்ததில் ஆக மோசமானது.  வீட்டு வாசலில் தேங்கிய பனியைச் சுத்தம் செய்ய சுமார் 10 மணி நேரம் ஆனது” என்கிறார் 8 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிக்கும் தணிகை.  

“நான் வசிக்கும் பஃபலோ (Buffalo) பகுதியில் மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். பனிப்புயலை நேரில் சென்று பார்க்கவேண்டும் என்ற சிலரது ஆசை விபரீதத்தில் முடிந்தது. பல அவசரச் சேவை வாகனங்கள் பனிப்புயலில் சிக்கியதால் கார்களில் சிக்கியவர்களைக் காப்பாற்ற 8 முதல் 10 மணி நேரமானது" என்றார் அவர்.

thanigai

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலம் முதல் கனடாவின் கியூபெக் மாநிலம் வரை சுமார் 3,200 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்தப் பயனிப்புயலின் தாக்கம் கடுமையாக உணரப்பட்டது. 

இந்நிலையில், கனடாவின் மற்ற பகுதிகளைப் போலன்றி பனிப்பொழிவுக்குப் பெரிதும் அறியப்படாத வான்கூவர் நகரில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவரிக்கிறார் அங்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் முனைவர் பழனிசாமி இரத்தினசாமி.

pazhani

“வான்கூவரில் 25 முதல் 30 சென்ட்டிமீட்டர் வரை  பனிப்பொழிவு இருந்தது. அத்துடன் பனிப்பொழிவின் பின் உடனே மழையும் பெய்ததால் பனிக்கட்டிகள் வழுக்கும் பனிப்பாறையைப் போலாகிச் சாலைகளில் போக்குவரத்தும் தடைபட்டது,” என்கிறார் அவர்.

மறுபுறம், பனிப்புயலால் அமெரிக்காவின் டாலஸ் நகரில் இயல்புக்கு அதிகமான பனிப்பொழிவு பதிவானதாகக் கூறுகிறார் அங்கு வசிக்கும் காசி பெருமாள். 

kasi

“இந்த எதிர்பார்க்காத பனிப்புயலால் எங்களைப் போன்று பலரது விடுமுறைக்கால பயணத்திட்டம் தடைபட்டது. பலரும் வீட்டிற்குள்ளேயே தங்களது விடுமுறையைக் கழிக்க நேரிட்டது. குறிப்பாக மோசமான பனிப்புயலின் காரணமாகக் கிறிஸ்துமஸுக்குப் பெயர்பெற்ற மெம்ஃபிஸ் போன்ற நகரங்கள் முற்றிலும் முடங்கிப்போயின,” என்கிறார் அவர்.

snow_3
பனிப்புயலால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மட்டுமல்ல ‘பாக்ஸிங் டே’ என்னும் பல்வேறு பொருள்களுக்கு வணிக நிறுவனங்கள் தள்ளுபடி வழங்கும் தினத்தையும் மக்கள் பயன்படுத்திக்கொள்வதில் சிரமம் நேரிட்டதாகக் கூறுகிறார் கனடாவின் டொரான்ட்டோ நகரைச் சேர்ந்த பிரவீன் ராஜ். 
pravin_raj

“கனடாவைவிட அமெரிக்காவைத்தான் இந்தப் பனிப்புயல் அதிகம் பாதித்தது. எனினும் கனடாவின் ஒன்ட்டாரியோ, கியூபெக் மாநிலங்களில் இன்னமும் கூட ஆயிரக் கணக்கான வீடுகளுக்கு மின் விநியோகம் சீராக்கப்படவில்லை. தீவிரப் பனிப்பொழிவினால் சாலைகள் பல மூடப்பட்டதால் பலர் வெளியே செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் நீண்ட விடுமுறை வீணாகிவிட்டதாகப் பலரும் கவலையில் உள்ளனர்,” என்றார் அவர்.

snow1
இந்நிலையில், பனிப்புயலின் தீவிரம் குறைந்து வருவதால் நிம்மதிப் பெருமூச்சுவிடத் தொடங்கியுள்ள மக்கள், வரும் ஞாயிறன்று பிறக்கும் புத்தாண்டுக்குள் நிலைமை ஓரளவு சீராகும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்