காஸா வட்டாரத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும்: டிரம்ப்

ANDREW CABALLERO-REYNOLDS / AFP
காஸா வட்டாரத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவுடன் (Benjamin Netanyahu) நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் அவ்வாறு சொன்னார்.
"காஸா வட்டாரத்தை அமெரிக்கா மேம்படுத்தும்...ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்," என்று திரு டிரம்ப் கூறினார்.
காஸாவில் உள்ள பயங்கரமான ஆயுதங்களையும், குண்டுகளையும் களையும் பொறுப்பை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் சொன்னார்.
உலக மக்கள் வாழக்கூடிய இடமாக அது மாறலாம் என்று சொன்ன அவர் மத்திய கிழக்கு வட்டாரத்துக்கு அது நிலைத்தன்மையைக் கொண்டுவரலாம் என்றார்.
திரு டிரம்ப்பின் யோசனையைத் திரு நெட்டன்யாஹு ஆதரித்தார்.
"திரு டிரம்ப் காஸா வட்டாரத்துக்கு வேறொரு வருங்காலத்தைக் காண்கிறார். அது வரலாற்றை மாற்றலாம்," என்று அவர் சொன்னார்.
காஸா மக்கள் அண்டை நாடுகளுக்கு நிரந்தரமாகக் குடியேறவேண்டும் என்று திரு டிரம்ப் ஏற்கெனவே பரிந்துரைத்திருந்தார்.
போரால் அவதிப்பட்ட காஸா வட்டாரத்தை மீண்டும் சீரமைக்கவேண்டும் என்று சொன்ன அவர் அங்குள்ளோர் வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியிருந்தார்.
மக்கள் எகிப்துக்கும் ஜோர்தானுக்கும் அப்பால் வேறு நாடுகளுக்குச் செல்லலாம் என்று அவர் சொன்னார்.
அத்திட்டத்துக்கு அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள், ஹமாஸ் உறுப்பினர்கள் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
காஸா வட்டாரத்திலிருந்து நிரந்தரமாக வெளியேறுவதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று ஹமாஸ் சொன்னது.
காஸா மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதும் அனைத்துலகச் சட்டத்துக்கு எதிரானது என்றது அமைப்பு.