சிறைபிடிக்கப்பட்ட வெனிசுவேலா அதிபர் - அமெரிக்கா அவ்வாறு செய்யமுடியுமா?
வெனிசுவேலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்திருப்பது குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
அது சட்டபூர்வமான நடவடிக்கையா என்பது அவற்றில் அடங்கும்.
திரு மடுரோவைக் கைதுசெய்ய அமெரிக்க நீதி அமைச்சு ராணுவத்தின் உதவியை நாடியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் மீது பயங்கரவாதம், போதைப்பொருள், ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
திரு மடுரோ அமெரிக்க நீதியின் முழு வலிமையை எதிர்நோக்குவார் என்று அமெரிக்கத் தலைமைச் சட்ட அதிகாரி பெம் பொண்டி (Pam Bondi) கூறியுள்ளார்.
எனினும் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அதிபர் டோனல்ட் டிரம்ப் அமெரிக்காவின் எண்ணெய் சார்ந்த நலன்களை வெனிசுவேலா திருடியதாகவும் வாஷிங்டன் அவற்றைத் திரும்பக் கைப்பற்றும் என்றும் தெரிவித்தார்.
அந்நாட்டைக் குறிப்பிட்ட காலத்துக்கு நிர்வகிக்கத் திட்டமிடுவதாகவும் அவர் சொன்னார்.
டிரம்ப் நிர்வாகம் சட்ட விவகாரங்களில் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக அனைத்துலகச் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
அது சட்ட அமலாக்க நடவடிக்கை என்று கூறிவிட்டு அதன்பிறகு நாட்டை ஆளத் தாங்கள் தேவைப்படுவதாகச் சொல்லமுடியாது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
இதற்குமுன் 1989இல் பனாமாவின் அப்போதைய தலைவர் ஜெனரல் மெனுவல் நொரியேகாவை இதேபோன்ற சூழ்நிலைகளில் அமெரிக்கா கைதுசெய்தது.
நொரியேகா போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்தார்.
பனாமா ஆயுதப் படையினர் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரைக் கொன்றதை அடுத்து அமெரிக்கக் குடிமக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக வாஷிங்டன் கூறியது.