"முகம் சுளிக்க வைக்கிறது" - சாலையோரக் கடையால் வந்த சர்ச்சை
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: Threads/@zaidonmuhammadamri
This audio is generated by an AI tool.
மலேசியாவில் சாலையோரக் கடைக்காரர் ஒருவரின் செயல் பலரை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
அவர் குளிர்பானங்கள் தயாரிக்கக் கழிவறை அருகே உள்ள குழாயிலிருந்து நேரடியாகத் தண்ணீரைப் பிடிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.
பெரிய கலன்களில் கழிவறைக்கு மிக அருகில் இருக்கும் குழாயிலிருந்து அவர் தண்ணீர் நிரப்பும் காட்சிகள் அதில் உள்ளன.
சுத்திகரிக்கப்படாத தண்ணீரைப் பயன்படுத்தி குளிர்பானத்தை 5 ரிங்கிட்டுக்கு (சுமார் 1 வெள்ளி 50 காசு) விற்பது எந்த வகையில் நியாயம் என காணொளியைப் பதிவேற்றியவர் கேட்டிருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து பலரும் உணவுப் பாதுகாப்புக் குறித்து அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
அதிருப்தியையும் வெளிபடுத்துகின்றனர்.
இவ்வாறு செய்வதால்தான் இத்தகைய குளிர்பானங்கள் வாங்குவதையே தாம் நிறுத்திவிட்டதாக ஒருவர் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்தைச் சக வியாபாரிகள் சிலரும் கண்டித்துள்ளனர்.
வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில்தான் தாம் குளிர்பானங்கள் தயாரிப்பதாக சாலையோரக் கடைக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை தண்ணீர் தீர்ந்துவிட்டால் கடையில் காசு கொடுத்து போத்தல் தண்ணீரை வாங்கிப் பயன்படுத்துவது வழக்கம் என்றாரவர்.
இனி சாலையோரக் கடைகளில் குளிர்பானங்கள் வாங்கும்போது ஒரு நிமிடம் யோசித்துத்தான் வாங்க வேண்டும் என்று சிலர் அறிவுறுத்துகின்றனர்.
இந்தச் செய்தியை மலேசியாவின் NST ஊடகம் வெளியிட்டது.