Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க வரலாற்றில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் முதல் முன்னாள் அதிபர் டிரம்ப் - என்ன நடக்கக்கூடும்?

வாசிப்புநேரம் -
அமெரிக்க வரலாற்றில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் முதல் முன்னாள் அதிபர் டிரம்ப் - என்ன நடக்கக்கூடும்?

(படம்:Ed JONES / AFP) / ALTERNATE CROP)

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் மீது இன்று (4 ஏப்ரல்) வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

அவர் அமெரிக்க வரலாற்றில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் முதல் முன்னாள் அதிபர்.

மன்ஹாட்டன் (Manhattan) குற்றவியல் நீதிமன்றத்தில் உள்ளூர் நேரம் பிற்பகல் 2.15 மணிக்கு (சிங்கப்பூர் நேரம் பின்னிரவு 2.15 மணியளவில்) வழக்கு விசாரணை தொடங்கும்.

எதற்காகக் குற்றச்சாட்டு?

பாலியல் உறவு இருந்ததாகக் கூறப்படும் தகவலை மறைப்பதற்காக ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்குத் (Stormy Daniels) திரு. டிரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கல் கோஹன் (Michael Cohen) 130,000 டாலர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் 2016 ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன் நடந்தது.

அது சட்டவிரோதமான செயல் இல்லை. அந்தப் பணத்தைத் திரு. டிரம்ப், திரு. கோஹனுக்குக் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இருப்பினும் கணக்கியல் ஆவணங்களில் அச்செயல் சட்டச் சேவைக்கான கட்டணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

போலி வர்த்தக ஆவணங்களைத் தயார்செய்வதற்கு அது சமம் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். அதன் தொடர்பில் குற்றச்சாட்டுகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

30க்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரு. டிரம்ப் குற்றச்சாட்டுகளை மறுக்கவுள்ளதாக அவரது வழக்கறிஞர் ஜோ டக்கோப்பினா (Joe Tacopina) கூறியுள்ளார். 

(படம்: CHANDAN KHANNA / AFP)
கையில் விலங்கு மாட்டப்படுமா?

திரு. டிரம்ப்புக்கு விலங்கு மாட்டப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

வழக்கமாகச் சந்தேக நபர்கள் காவல்துறை நிலையத்திலிருந்து கையில் விலங்கு மாட்டப்பட்ட நிலையில் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

திரு. டிரம்ப், வட்டார அரசுத்தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து நேரடியாக நீதிமன்றத்துக்குச் செல்வார்.

நீதிமன்றத்தில் அவரது படம், கை ரேகை எடுக்கப்படலாம். திரு டிரம்ப்பின் முகவரிகள் பதிவுசெய்யப்படும்.


திரு. டிரம்ப் பிணையில் விடுவிக்கப்படுவாரா?

பிணையின்றி அவர் விடுவிக்கப்படுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் எதிர்நோக்கக்கூடிய குற்றச்சாட்டுகளுக்குப் பிணை ஆணை பிறப்பிப்பது அவசியமில்லை. இருந்தாலும் திரு. டிரம்ப், தடுப்புக்காவலில் வைக்கப்படவேண்டும் என்று நீதிபதி உத்தரவிடலாம். அதற்கு அவசியமில்லை என்றும் திரு. டிரம்ப் தப்பிக்கமாட்டார் என்றும் வழக்கறிஞர்கள் வாதாடலாம்.

அவர் நிபந்தனை அடிப்படையில் விடுவிக்கப்படுவதற்கும் நீதிபதி உத்தரவிடலாம்.

திரு. டிரம்புக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படுமா?

குற்றச்சாட்டுகள் என்னென்ன என்பது இன்னும் தெரியவில்லை. அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படுமா என்று சொல்லமுடியாது.
(படம்: Giorgio Viera / AFP)
பலத்த பாதுகாப்பு

நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சில சாலைகள் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள், Trump Tower கட்டடத்துக்கு வெளியே பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்