உலகம் trending
இசை நிகழ்ச்சியின்போது கத்தியைக் காட்டி மிரட்டிய பெண் கைது
காணொலியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஓர் இசை நிகழ்ச்சியின்போது கத்தியை வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சம்பவம் கடந்த சனிக்கிழமை (மே 2) நடந்தது.
Rain Rave Water இசை நிகழ்ச்சியின்போது கூட்டத்தின் மத்தியில் அவர் கத்தியைக் கையில் பிடித்துக்கொண்டிருந்தார்.
அவரைச் சிலர் குழுவாகத் தடுத்தனர்.
அந்தச் சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
காணொளியில் சிலர் அந்தப் பெண்ணின் கரங்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருந்தனர். பெண் பிடியிலிருந்து தப்ப முயன்றாலும் அவர்கள் அவரைத் தப்ப விடவில்லை.
காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரும்வரை அவர்கள் பெண்ணைத் தடுத்து வைத்திருந்தனர்.
அவர்களுடைய வீரச் செயலை இணையவாசிகள் பாராட்டினர். குறிப்பாகக் காணொளியில் தெரிந்த ஆடவருக்குப் பாராட்டு குவிகிறது.
"பெண்ணைத் தடுத்து நிறுத்திய ஆடவரைப் பாராட்டுகிறேன்," என்று பலர் பதிவிட்டனர்.
"இத்தகைய அபாயமான சூழலை அனைவராலும் கையாள முடியாது. அதற்குப் பயிற்சி பெற்றிருக்கவேண்டும்," என்று ஒருவர் குறிப்பிட்டார்.
சென்ற டிசம்பர் மாதம் தைவானில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலை நினைவுகூர்ந்த ஒருவர், "நல்ல வேளை தைவானில் நடந்ததுபோல் மலேசியாவிலும் நடக்கவில்லை," என்று பதிவிட்டார்.