4 நிமிடத்திலேயே முதல் கோல் - துனிசியாவை வெளுத்துக்கட்டிய ஜப்பான்
REUTERS/Eloisa Sanchez
This audio is generated by an AI tool.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஜப்பானும் துனிசியாவும் சந்தித்த ஆட்டத்தில் 4-0 எனும் கோல் கணக்கில் ஜப்பான் வெற்றிகண்டது.
இன்று (21 ஜூன்) சிங்கப்பூர் நேரம் நண்பகல் 12 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.
உலகக் கிண்ண வரலாற்றில் பதிவான 1,000ஆம் ஆட்டம் இது.
ஜப்பானின் டைச்சி காமாடா (Daichi Kamada) ஆட்டம் தொடங்கிய நான்காவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார்.
இதுவரை ஆக வேகமாக கோல் போட்ட ஜப்பானியர் அவர்.
இதற்குமுன் 2018ஆம் ஆண்டில் ஷிஞ்சி ககாவா (Shinji Kagawa) அந்த சாதனைக்கானச் சொந்தக்காரராக இருந்தார்.
ஆட்டம் தொடங்கிய ஆறாவது நிமிடத்தில் அவர் கோல் போட்டிருந்தார்.
துனிசியாவுடனான ஆட்டத்தில் ஜப்பானின் அயாசே உவேடா (Ayase Ueda) 31ஆம் நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார்.
69ஆவது நிமிடத்தில் ஜூன்யா இத்தோ (Junya Ito) ஜப்பானின் மூன்றாவது கோலைப் போட்டார்.
உவேடா பின்னர் 83ஆவது நிமிடத்தில் இறுதி கோலை அடித்துத் தமது அணிக்கு வெற்றியை உறுதிசெய்தார்.
ஒரே ஆட்டத்தில் நான்கு கோல்களைப் புகுத்திய முதல் ஆசிய நாடு எனும் பெருமையையும் அது பெற்றுள்ளது.