இளையர் குரல் செய்தியில் மட்டும்
Rhodes உபகாரச் சம்பளம் பெற்ற முதல் சிங்கப்பூர் இந்தியர்

படம்: Rhodes Scholarship Committee, Singapore
1902ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட Rhodes உபகாரச் சம்பளம் உலகிலேயே ஆகப் பழமையான, கௌரவமான அனைத்துலக உபகாரச் சம்பளமாகக் கருதப்படுகிறது.
அந்த உபகாரச் சம்பளத்தைப் பெறுவோர் முழுநேரப் பட்டப்படிப்பை Oxford பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளலாம்.
ஒவ்வோர் ஆண்டும் சிங்கப்பூரில் ஒருவருக்கு மட்டுமே Rhodes உபகாரச் சம்பளம் வழங்கப்படுகிறது.
APS Asset Management நிறுவனம் சிங்கப்பூர் Rhodes உபகாரச் சம்பளத்திற்கு நிதி வழங்குகிறது.
இந்த ஆண்டு அந்த உபகாரச் சம்பளத்தைப் பெற்ற 25 வயது குரூப்ரணவ் குருசங்கர் அதன் கீழ் 2 முதுநிலைப்பட்டங்களைப் பயிலவிருக்கிறார்.
அதில் ஒன்று பொதுக் கொள்கைகள் முதுநிலைப்பட்டம். மற்றொன்றை இன்னும் தெரிவு செய்யவில்லை என்று திரு குரூப்ரணவ் குறிப்பிட்டார்.
அவர் கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் Stanford பல்கலைக்கழகத்தில் கணினியியலில் பட்டப்படிப்பை முடித்து முதுநிலைப்பட்டம் பெற்றார்.
திரு குரூப்ரணவ் அடுத்த மாதம் Oxford பல்கலைக்கழகத்தில் சேர பிரிட்டனுக்குச் செல்லவிருக்கிறார்.
பொதுக் கொள்கைகளில் முதுநிலைப்பட்டம்.. அதை தேர்ந்தெடுக்கக் காரணம்?
"மருத்துவம் என்று சொல்லும்போது செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதன் மூலம் உருவாகும் பலன்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதை உறுதிசெய்ய சரியான கொள்கைகளும் ஒழுங்குமுறைகளும் இருப்பது அவசியம்," என்று திரு குரூப்ரணவ் 'செய்தி'யிடம் தெரிவித்தார்.
எனவே அந்த இலக்கை அடையத் தாம் தமக்குக் கிடைத்த உபகாரச் சம்பளத்தைச் சரியாகப் பயன்படுத்த எண்ணுவதாக அவர் தெரிவித்தார்.

"உபகாரச் சம்பளம் கிடைக்குமா?"
"உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பம் செய்வதில் பயனில்லை. என்னைத் தேர்ந்தெடுக்கமாட்டார்கள்."
என்ற தயக்கங்கள் தமக்குள் முன்பு இருந்ததாகத் திரு குரூப்ரணவ் பகிர்ந்துகொண்டார்.
அந்த உணர்வைத் தாண்டி வருவது பெரிய சவாலாய் இருந்ததாக அவர் சொன்னார்.
சுற்றி இருந்தோர் தந்த ஊக்கம் உபகாரச் சம்பளம் பெற உறுதுணையாய் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
உபகாரச் சம்பளத்தைச் சரியான முறையில் பயன்படுத்தி, தமது வாழ்க்கையிலும் சமூகத்திலும் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவதாய் குரூப்ரணவ் சொன்னார்.
Rhode உபகாரச் சம்பளத்திற்கு தகுதிபெற சில நிபந்தனைகள் உள்ளன.
அதை இந்த இணையப்பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.