இளையர் குரல் செய்தியில் மட்டும்
"உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது" - GCE 'A' நிலைத் தேர்வில் தேர்ச்சிபெற்ற இளையர்
படம்: மில்லேனியா கல்விநிலையம்
சென்ற ஆண்டு (2023) பொதுக்கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் நேற்று (23 பிப்ரவரி) அவர்களது தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்டனர்.
மில்லேனியா கல்விநிலையத்தைச் (Millennia Institute) சேர்ந்த ஜீவரத்தினம் தனசேகர் நித்திஷ் ராமனும் (Jeevarathinam Dhanasekar Nithish Raman) அவரது தேர்வு முடிவைப் பெற்றார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றை அவர் சாதித்துக் காட்டியிருக்கிறார்.
நித்திஷ் மேல்நிலைத் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
இதற்கு முன்னர் கவனச்சிதறல் தம்மைப் பெரிய அளவில் பாதித்ததாகவும் அதிலிருந்து மீண்டு வந்ததாகவும் அவர் 'செய்தி'யிடம் தெரிவித்தார்.
"நேரத்தை வீணாக்கினேன்; அதன் பின்விளைவுகளை அனுபவித்தேன்"
"YouTube, Instagram போன்ற சமூக ஊடகத் தளங்களில் நான் அதிக நேரம் செலவழித்தேன். நேரத்தை ஒழுங்காகத் திட்டமிடத் தவறினேன். அதனால் எனது இரண்டாம் ஆண்டு படிப்பை மீண்டும் மேற்கொள்ளவேண்டியிருந்தது. அது எனக்கு ஒரு பாடமாக அமைந்தது," என்றார் நித்திஷ்.
தமது செயல்களை மறுஆய்வு செய்த பின்னர் நேரத்தை எப்படி ஒழுங்காகத் திட்டமிட்டுச் செலவிடலாம் என்பதைக் கற்றுக்கொண்டதாக அவர் சொன்னார்.
"பெற்றோரின் ஆதரவு, ஆசிரியர்களின் ஊக்கம் கைகொடுத்தன"
பெற்றொர் தமக்குப் பெருந்துணையாக இருந்ததாக நித்திஷ் கூறினார்.
"எனது முழுத் திறமையை வெளிப்படுத்த எனது பெற்றோர் முக்கியப் பங்காற்றினர். எனது ஆசிரியர்களும் என்னைக் கைவிடவில்லை. முடிந்தபோதெல்லாம் எனக்குக் கூடுதலான பயிற்சிகளை அளித்ததோடு எனக்கு உற்சாகமளித்தனர்," என்று அவர் சொன்னார்.
"இளையர்களுக்கு நான் சொல்ல விரும்புவது..."
"இப்போதே மகிழ்ச்சியை அனுபவித்தால் பிற்காலத்தில் வருந்தவேண்டியிருக்கும். இன்று கடினமாக உழைத்தால் மட்டுமே எதிர்காலம் சிறப்பாக அமையும். உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது," என்று நித்திஷ் பெருமிதத்துடன் சொன்னார்.
.jpg)
.jpg)


(படங்கள்: மில்லேனியா கல்விநிலையம்)