இளையர் குரல் செய்தியில் மட்டும்
“உதவி கேட்கத் தயங்காதீர்; நம்மைச் சுற்றி நல்லுள்ளங்கள் இருக்கின்றன” -சிண்டா உன்னத விருது பெற்ற இளையர்

இளம் வயதில் குடும்பப் பொறுப்புகளைச் சுமப்பது சுலபமல்ல...
எதிர்காலத்திற்காகத் தற்காலிக இன்பங்களை விட்டுக்கொடுப்பதற்குப் பக்குவம் வேண்டும்.
Ngee Ann பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் 19 வயது நந்தகிஷோர் புவனேஸ்வரன் பல இளையர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
குடும்பத்தின் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அவர் வேலை, படிப்பு இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளிக்கிறார்.
2022ஆம் ஆண்டில் தந்தை நீரிழிவு நோயின் காரணமாகக் காலை இழந்தார்…வேலையையும் இழந்தார். குடும்பத்தின் ஒரே வருமானம் போனது; நிலை மாறியது.
அப்போது தமது வாழ்வில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டதாகச் 'செய்தி'யிடம் தெரிவித்தார் கிஷோர்.
தாயார் முழுநேரமும் தந்தையின் பராமரிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.
கிஷோரும் அவரது தம்பியும் படித்துக்கொண்டே வேலை செய்யத் தொடங்கினர்.
குடும்பத்தில் மூத்த மகன் என்பதால் கிஷோருக்குப் பொறுப்புகள் சற்று அதிகம்.
பார்த்துப் பார்த்துச் செலவு செய்யவேண்டும்.
Shopee நிறுவனத்தில் வேலை செய்யும் கிஷோர் பொட்டலங்களை வகைப்படுத்தி வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறார். சில நாள்கள் அவர் இரவுநேரத்திலும் வேலை செய்கிறார்.
"எனது பின்னணியைக் காரணங்காட்டிச் சாக்குபோக்குச் சொல்ல விருப்பமில்லை. எனது எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காகச் சில தியாகங்கள் செய்யவேண்டியிருக்கிறது. அது பிற்காலத்தில் கைகொடுக்கும் என நம்புகிறேன்,"
என்று உறுதியாகக் கூறுகிறார் கிஷோர்.
சிண்டா உன்னத விருது கிடைத்ததை நினைத்துப் பெருமைப்படுவதாகவும் அவர் கூறினார்.
"விருது உத்வேகம் அளித்தது. நான் தனி ஒருவனாகச் சிரமப்படவில்லை. குடும்பம், நண்பர்கள் மட்டுமல்லாமல் என்னைச் சுற்றி பல தரப்புகளிடமிருந்து ஆதரவு இருக்கிறது என்பதை அந்த விருது உணர்த்தியது. மன தைரியத்தை அளித்தது," என்றார் கிஷோர்.
கிஷோர் 'செய்தி'யிடம் மனந்திறந்து கூறிய வார்த்தைகள்….
“இளம் வயதிலேயே பொறுப்புகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால், மனோதிடம் வளரும். மாறிவரும் சூழ்நிலைகளுக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்வது முக்கியம். பிரச்சினை இருந்தால் உதவி கேட்பதில் தயக்கம் இருக்கக்கூடாது. நல்ல உள்ளங்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கின்றன.”