இளையர்களே இளையர்களுக்காக நடத்திய "வணிக வேட்டை" நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு

படம்: ஹாரூன்
"ஒரு பொருளை வாடிக்கையாளர்களிடம் எப்படிக் கொண்டு சேர்ப்பது?"
"தொழிலில் இறங்கியபிறகு முதலீட்டாளர்களை எப்படி ஈர்ப்பது?"
"ஒரு பொருளை எப்படி விளம்பரப்படுத்துவது?"
தொழில் தொடங்க விரும்பும் இளையர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தது 'வணிக வேட்டை 2024' நிகழ்ச்சி.
தேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (NTU) தமிழ் இலக்கிய மன்றமும் (NTU TLS) தமிழர் பேரவையின் இளையர் பிரிவும் (TRC Youth Wing) இணைந்து நடத்திய "வணிக வேட்டை 2024" ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடைபெற்றது.
நிகழ்ச்சி சில வாரங்களுக்கு வெவ்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டது.
--முதலில் Tea Talkies என்ற பெயரில் 3 தொழில் முனைவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சி.
--அதற்குப் பிறகு தொடர்ந்து 3 சனிக்கிழமைகளில் தொழில் தொடங்குவது தொடர்பான பல்வேறு அம்சங்கள் பயிலரங்குகளாக நடைபெற்றன.
-- கடைசி அங்கமாக இளையர்கள் யோசனைகளை முன்வைக்கும் தொழில் முனைப்புப் போட்டியும் கருத்தரங்கும் கடந்த சனிக்கிழமை (2 மார்ச்) நடைபெற்றது.
இளையர்களே இளையர்களுக்காக நடத்திய இந்த நிகழ்ச்சியில் தொழில் யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
யோசனைகளை நடுவர்கள், தொழில் வல்லுநர்கள் முன்னிலையில் வெளிப்படுத்துவதற்கு நிகழ்ச்சி இளையர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பளித்தது.
நேரடி அனுபவத்தின் மூலம் நிபுணர்களிடமிருந்து ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பெற முடிந்ததாகக் கலந்துகொண்டவர்கள் கூறினர்.
இளையர்களின் தொழில் முனைப்பையும் படைப்பாற்றலையும் ஊக்குவிப்பதே "வணிக வேட்டை 2024"இன் நோக்கம் என்றனர் ஏற்பாட்டாளர்கள்.
இளையர்களிடையே தொழில்முனைப்பு ஆர்வத்தை வளர்ப்பதில் "வணிக வேட்டை 2024" அதன் வெற்றியை நிலைநாட்டியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இத்தகைய நிகழ்வுகளில் கலந்துகொள்வதன் மூலம் ஏட்டுக் கல்வியைத் தாண்டிப் பொதுவான திறன்களையும் அறிவாற்றலையும் வளர்த்துக்கொள்ள முடிவதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளையர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
(படங்கள்: ஹாரூன்)