இளையர் குரல் செய்தியில் மட்டும்
சிங்கப்பூரில் பாலினச் சமத்துவம் எப்படி உள்ளது? மனந்திறந்து பேசிய இளையர்கள்

அனைத்துலக மகளிர் தினத்தன்று Google தேடல் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட படம்.
இன்று அனைத்துலக மகளிர் தினம்.
பெண்கள் சமுதாயத்தில் ஆற்றும் முக்கியப் பங்கை எடுத்துச்சொல்லும் நாள் இது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே பாலினச் சமத்துவத்தை நிலைநிறுத்தும் முக்கியத்துவத்தை இந்நாள் வலியுறுத்துகிறது.
சிங்கப்பூரில் பாலினச் சமத்துவம் எப்படி உள்ளது? எந்தெந்த அம்சங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளோம்? இன்னும் என்னென்ன வகைகளில் நாம் நம்மை மேம்படுத்திக்கொள்ளவேண்டும்?
அதுகுறித்து இளையர்கள் என்ன நினைக்கிறார்கள்?
'செய்தி'யுடன் கருத்துகளைப் பகிர்ந்தனர் இளையர்கள் சிலர்...
சிங்கப்பூரில் பாலின இடைவெளி குறைந்துள்ளது. ஆண்கள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகக் கருதப்படும் துறைகளில் பெண்களும் தடம் பதிக்கின்றனர். அதுமட்டுமல்ல, கல்வித்துறை, தாதிமைப் பராமரிப்பு போன்றவை பெண்களுக்கு உரியது எனும் சிந்தனை மாறியுள்ளது. மேலும் பல ஆண்கள் அத்துறைகளில் சேர முன்வருகின்றனர். இந்த மாற்றம் நல்லதற்கே"
- பவித்ரா
"வேலையிடங்களில் ஆண் - பெண் சம்பள இடைவெளி நீடிக்கிறது. பிள்ளை பெற்றவுடன் பெண்கள் சற்றுப் பின்தங்கிவிடுகின்றனர். தந்தையர் விடுப்பு, பகிரும் பெற்றோர் விடுப்பு கூடியுள்ளன. ஆனால் எத்தனை ஆண்கள் விடுப்புநாளை எடுக்கின்றனர்? அப்படி எடுத்தாலும் அது தற்காலிகமாக உள்ளது. ஆண்கள் விடுப்புநாள் முடிந்த கையோடு வேலைக்குத் திரும்பும்போது பிள்ளைப் பராமரிப்புப் பொறுப்பு பெரும்பாலும் பெண்களின் கையில் மீண்டும் ஒப்படைக்கப்படுகிறது"
- அன்பு
"கூடுதல் வீட்டுப்பொறுப்புகளைச் செய்வதிலும் house husbandஆக இருப்பதிலும் எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் அதைச் சரியாக வரையறுக்கவேண்டும் என்று நினைக்கிறேன்"
- ஆகாஷ்
"பெண்கள்தான் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளவேண்டும் எனும் பின்னோக்கிய சிந்தனையை உடைக்கவேண்டும். பெண்கள் பல தியாகங்களைச் செய்யவேண்டிய நிலை ஏற்படாமல் இருந்தால் பாலினச் சமத்துவத்தை அடைந்துவிட்டோம் என்று சொல்லலாம்"
- பாவை சிவக்குமார்
"ஆண்கள் தினத்தைவிட மகளிர் தினத்தின்மீது அதிகக் கவனம் செலுத்துகிறோம். பெண்களின் பங்கைக் கொண்டாடவேண்டும். அவர்களைக் கௌரவிக்கவேண்டும் என்று குரல் எழுப்புகிறோம். இதுவே பாலின இடைவெளியைக் காட்டுகிறது. ஆண்கள் அவ்வாறு செய்யத் தேவையில்லை. பெரும்பாலும் அவர்களுக்கு உரிய நேரத்தில் அங்கீகாரம் கிடைக்கிறது"
-ஷர்மிளா
"மேலும் பல ஆண்கள் வீட்டுவேலை, குழந்தைப் பராமரிப்பு போன்ற பொறுப்புகளைச் சமமாகப் பகிர்ந்துகொள்ள முன்வருகின்றனர். அதற்கு எனது கணவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நான் வேலைக்குச் செல்வதை ஆதரிக்கிறார். குடும்பப் பொறுப்புகளையும் சமமாகக் கையாள்கிறோம்"
- சிட்டாள்