இளையர் குரல் செய்தியில் மட்டும்
வரவுசெலவுத் திட்டத்தில் இளையர்களைக் கவர்ந்தது எது?

(படம்: Envato Elements)
இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைப் பிரதமரும் நிதியமைச்சருமான திரு லாரன்ஸ் வோங் நேற்று (18 பிப்ரவரி) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் அறிவிக்கப்பட்டது என்றார் அவர்.
வரவுசெலவுத் திட்டத்தில் இளையர்களைக் கவர்ந்தது எது?
வேறு என்ன செய்திருக்கலாம்?
'செய்தி'யுடன் கருத்துகளைப் பகிர்ந்தனர் இளையர்கள் சிலர்...
"வரவுசெலவுத் திட்டத்தில் என் கவனத்தை ஈர்த்த ஓர் அறிவிப்பு SG60 குழந்தைகளுக்குக் கிடைக்கவிருக்கும் சிறப்புப் பரிசு. அது என்ன பரிசு என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது. இதற்கிடையில், 600 வெள்ளி பற்றுச்சீட்டுகளுக்குப் பதிலாக ரொக்கமாகக் கொடுத்திருந்தால் பல குடும்பங்களுக்கு அது உதவியாக இருந்திருக்கும்" - சிட்டாள்
"என் கவனத்தை ஈர்த்தது Edusave/PSEA கணக்குகளில் 500 வெள்ளி கூடுதலாக நிரப்பப்படுவது. 17 வயதாகிய நான் விரைவில் பலதுறைத் தொழிற்கல்லூரிக்குச் செல்லவிருக்கிறேன். அந்தக் கூடுதல் தொகை கல்லூரி கட்டணத்தைச் செலுத்த உதவும்" - பவித்ரா
"அன்றாடச் செலவுகளுக்கு உதவ சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும் SG60 பற்றுச்சீட்டுகள் என்னை ஈர்த்த அறிவிப்பு. அண்மையில் படிப்பை முடித்தோரும்
மாணவர்களும் ஊழியரணியில் சேர கூடுதல் ஆதரவு திட்டங்களை அறிவித்திருக்கலாம்" - அன்பு
"வாழ்க்கை செலவினத்தைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படவிருக்கும் SG60 பற்றுச்சீட்டுகள். அது நல்ல முயற்சி. சிங்கப்பூரின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பவை் சிறிய, நடுத்தர நிறுவனங்கள். அவற்றுக்கு வரிக்கழிவு, மானியங்கள் போன்ற கூடுதல் ஆதரவு கொடுத்திருக்கலாம்" - அனுஷா
"பல்கலைக்கழக மாணவியாக இருப்பதால் 600 வெள்ளி SG60 பற்றுச்சீட்டுகள் என்னுடைய செலவுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும். பகுதிநேர வேலை பார்த்துக்கொண்டு படிப்பது கடினமாக இருக்கும்.. எனவே இந்தத் தொகை மிகவும் உதவியாக இருக்கும்." - அருணா