Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா செய்தியில் மட்டும்

மன்னிப்பாயா?

வாசிப்புநேரம் -

தினசரி நம்மில் எத்தனை பேர் மற்றவரிகளிடம் மன்னிப்புக் கேட்போம்?

"மன்னிப்பாயா?"... இவை எளிதில் ஒருவர் கேட்கக்கூடிய சொற்கள் தான்... ஆனால்  மன்னிப்பை நீங்கள் எளிதில் ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது ஏற்றுக்கொள்ளத் தயங்குவீர்களா?

பேசுவோம்...

வாழ்க்கையில் அனைவரும் ஏதோ ஒரு நேரத்தில் தவறு செய்வோம். அதன் பிறகு, அந்த தவற்றை உணரும்போது மன்னிப்பும் கேட்போம். அப்படி மன்னிக்கப்படுபவர்களுக்கு தான் இரண்டாம் வாய்ப்புக் கிடைக்கும்.

மன்னிப்புக் கேட்பவர்கள் ஒரு மெல்லிய கோட்டுக்கு நடுவில் இருப்பதைப்போல உணர்வார்கள். 

கோட்டிற்கு அந்தப் பக்கம் ஒரு பாதை, கோட்டிற்கு இந்தப் பக்கம் மற்றொரு பாதை என இருக்கும். மன்னிப்பில் தான் பலரின் வாழ்க்கை திசைமாறும். 

அந்த மெல்லிய கோட்டில் நின்றவர்களுள் நானும் ஒருவன்.

பள்ளிப் பருவம். அதுவும் தொடக்கப்பள்ளிப் பருவத்தில் தான் பலரின் சுட்டித்தனம் வெளிப்படும். 

பாட நேரத்தில் நண்பர்களோடு திடலில் விளையாடுவது… மாணவர்களிடம் பணம் வசூலித்து நடன நிகழ்ச்சியை நடத்துவது  எனக் குறும்புத்தனத்தின் உச்சக்கட்டத்தில் இருந்திருக்கிறேன். 

நான்காம் நிலையில் படிக்கும்பொழுது ஒரு மாணவனை அடித்துவிட்டேன். அன்று நான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை, உடனே உணர்ந்துவிட்டேன். 

என்னைப் பள்ளியிலிருந்து நீக்க என் கட்டொழுங்கு ஆசிரியர் முடிவு செய்தார்.

அவர் என்னைத் தலைமையாசிரியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றபோது, என்னை மன்னிக்கும்படி மன்றாடினேன்.

இனிமேல் தவறு ஏதும் செய்யமாட்டேன் எனக் கதறினேன். 

கேட்க மிகைப்படுத்துவது போல் இருக்கலாம், ஆனால் நான் அவர் காலில் கூட விழுந்தேன்... இன்னொரு வாய்ப்புக்காக. 

திரு. பேக் என் கட்டொழுங்கு ஆசிரியர்… என்னைப் பார்த்தார்… யோசித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு சிறிய தவறுகூட செய்யக்கூடாது என்று உறுதிகேட்டுக்கொண்டு என்னை மன்னித்தார்.

அவர் என்னை மன்னித்தது ஒரு சிறிய செயலாக இருக்கலாம், ஆனால் அந்த மறு வாய்ப்பால் தான்,  நான் இங்கு ஒரு செய்தித் தயாரிப்பாளராக இந்தக் கதையை எழுதுகிறேன். 

என்னை மாற்றிக்கொள்ள அந்த மறுவாய்ப்புக் கொடுக்கப்படவில்லை என்றால், என் வாழ்க்கைப் பாதையே தடம் மாறியிருக்கலாம்.

“மன்னிப்புக் கேட்பவன் மனுஷன்... மன்னிக்கத் தெரிஞ்சவன் பெரிய மனுஷன்”.

இது என் வாழ்க்கையின் ஒரு பக்கம் மட்டுமே… ஆனால் அடுத்த பக்கத்திற்குச் செல்ல அந்த ஒரு பக்கத்தின் பங்கு மிகப்பெரியது. 

நீங்கள் யாரையாவது மன்னிக்கவேண்டும் என்றால் அது யாராக இருக்கும்? யோசிக்கலாமே!

எவராகவும் இருக்கலாம்!

மன்னிப்போம்… மறப்போம்… மறுவாய்ப்பினை வழங்குவோம்!

விரைவில் சந்திப்போம்.

அன்புடன்,
பார்த்திபன்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்