வரி செலுத்தப்படாத சிகரெட் கடத்தல் - 8 பேர் கைது
படங்கள்: சிங்கப்பூர்ச் சுங்கத்துறை
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் வரி செலுத்தப்படாத சிகரெட்களைப் பொட்டலங்கள் மூலம் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் எட்டு ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
29 முதல் 44 வயதுடைய அவர்கள் அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள்.
நவம்பர் 6 முதல் 11ஆம் தேதிவரை நடத்தப்பட்ட சோதனைகளில் அவர்கள் பிடிபட்டனர்.
113க்கும் மேற்பட்ட சிகரெட் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
செலுத்தப்படாத வரி, பொருள் சேவை வரி ஆகியவற்றின் மொத்த மதிப்பு சுமார் 17,235 வெள்ளி.
சாங்கி விமானச் சரக்கு நிலையத்தில் சந்தேகத்துக்குரிய பொட்டலங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அவற்றில் காப்பியும் புத்தகங்களும் இருப்பதாகப் பொய்த் தகவல் கொடுக்கப்பட்டது.
ஆனால் அவற்றுக்குள் வரி செலுத்தப்படாத சிகரெட்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தன.
சிகரெட்கள் இணையத்தில் வாங்கப்பட்டு சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அங் மோ கியோ (Ang Mo Kio), பேலஸ்டியர் (Balestier), சைனாடவுன் (Chinatown), உட்லண்ட்ஸ் (Woodlands), யீஷூன் (Yishun) ஆகிய வட்டாரங்களில் பொட்டலங்களைப் பெறவிருந்த ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
நால்வர்மீது நீதிமன்ற நடைமுறை தொடங்கியிருக்கிறது. மற்ற நால்வரிடம் விசாரணை தொடர்கிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் செலுத்தப்படாத வரியின் 40 மடங்குவரை அபராதம், ஆறாண்டுவரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.