விமானத்தில் வங்கி அட்டை திருட்டு - இருவர் கைது
(படம்: Facebook / Changi Airport)
This audio is generated by an AI tool.
விமானத்தில் பயணிகளின் வங்கி அட்டைகளைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு ஆடவர்கள் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒருவருக்கு வயது 54. மற்றொருவருக்கு வயது 59.
இருவரும் சீன நாட்டவர்கள்.
விமானங்களில் திருட்டைத் தடுப்பதற்காக நேற்று முன்தினம் (12 அக்டோபர்) சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையத்தில் காவல்துறை சோதனை நடத்தியது.
தங்களுக்குச் சொந்தமில்லாத மூன்று வங்கி அட்டைகளை வைத்திருந்த ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வியட்நாமின் ஹோ சி மின் சிட்டியிலிருந்து(Ho Chi Minh City) சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த விமானத்தில் திருட்டு நடந்ததாகத் தெரிகிறது.
பிடிபட்ட ஆடவர்கள் இரண்டு பயணிகளின் பைகளில் இருந்து வங்கி அட்டைகளைத் திருடியதாகக் கூடுதல் விசாரணையில் தெரியவந்தது.
விமான இருக்கைகளுக்கு மேலேயுள்ள இடத்தில் வைக்கப்பட்டிருந்த பைகளிலிருந்து அவை திருடப்பட்டன.
வங்கி அட்டைகள் காணாமல் போனது அறியாமலேயே பாதிக்கப்பட்ட பயணிகள் விமானத்திலிருந்து இறங்கினர்.
கைது செய்யப்பட்ட ஆடவர்கள் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.