செங்காங் கிரீன் தொடக்கப்பள்ளி கொலை மிரட்டல் சம்பவம் - மாணவி பள்ளி மாறவில்லை

(படம்: Google Street View)
செங்காங் கிரீன் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்கள், சக மாணவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
மூன்றாம் வகுப்புப் படிக்கும் அந்த 3 மாணவர்கள் பள்ளியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோருடன் பள்ளி 4 மணி நேரம் சந்திப்பு நடத்தியது.
சந்திப்புக்குப் பின்னர் மாணவியை வேறு பள்ளிக்கு மாற்றும் முடிவை அவர்கள் மாற்றிக்கொண்டதாக அமைச்சு சொன்னது.
கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மாணவி பள்ளிக்குத் திரும்புவார் என்று அது குறிப்பிட்டது.
மாணவியும் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக அமைச்சு கூறியது.
அச்சுறுத்தல் குறித்து ஒவ்வொரு முறையும் புகார் அளிக்கப்பட்டபோது பள்ளி உடனே நடவடிக்கை எடுத்ததாக அமைச்சு விளக்கியது.
அந்த 3 மாணவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்ட மாணவியைப் தனது பையால் அடித்தபோது, அந்த மாணவருக்குப் பிரம்படி விதிக்கப்பட்டதாக அது தெரிவித்தது.
ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொண்ட அதே வேளையில் மாணவர்கள் மீண்டும் நட்பாகப் பழகவும் கற்றுக்கொள்ளவும் வழிவகுத்ததாக அது பகிர்ந்தது.
கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் கூடுதல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு சொன்னது.