இளையர் குரல் செய்தியில் மட்டும்
'தோல்விக்கு இடமில்லை...கங்கணம் கட்டிக்கொண்டு விளையாடினோம்' - சிங்கப்பூருக்குப் பெருமை தேடித்தந்த வலைப்பந்துக் குழு
"உயிரைக் கொடுத்து விளையாடினோம். வெற்றி எங்கள் பக்கம் திரும்பியது"
சிங்கப்பூரில் பெண்களுக்கான வலைப்பந்துக் குழுவைச் (The Singapore Vandas) சேர்ந்த அமன்தீப் உற்சாகத்துடன் சொன்னார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியாவின் வலைப்பந்து வெற்றியாளர் கிண்ணத்தை வென்ற சிங்கப்பூர் அணியைச் சேர்ந்தவர் அவர்.
67-64 எனும் புள்ளிக் கணக்கில் சிங்கப்பூர் இலங்கையைத் தோற்கடித்து வாகை சூடிய தருணத்தை வார்த்தைகளால் வருணிப்பது சிரமம் என்று அமன்தீப் 'செய்தி'க்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் Netball எனும் வலைப்பந்து விளையாட்டு மீதுள்ள ஆர்வம் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.
இங்கு சுமார் 220 பள்ளிகளில் வலைப்பந்து விளையாடப்படுகிறது. 87க்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வலைப்பந்து மன்றங்கள் இருப்பதாக Netball Singapore 'செய்தி'யிடம் கூறியது.
தோல்விக்கு இடமில்லை
போட்டியில் வெற்றிபெற்ற தருணம் மெய்சிலிர்க்க வைத்ததாகச் சொன்னார் அமன்தீப்.
"2022இல் இலங்கையிடம் தோல்வி அடைந்தோம். இம்முறை தோல்விக்கு இடமில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு விளையாடினோம்,"
போட்டிக்காகக் குழுவினர் தங்களை முழுமையாக அர்ப்பணித்ததாக வலைப்பந்துக் குழுவைச் சேர்ந்த மிஷா 'செய்தி'யிடம் பகிர்ந்தார்.
"பல்லாண்டுகளாகச் செய்த பயிற்சி, பயிற்றுவிப்பாளரின் அர்ப்பணிப்பு, குழுவின் கடின உழைப்பு, அஞ்சா நெஞ்சம்...இவை அனைத்துமே வெற்றிக்குக் கைகொடுத்தன," என்றார் மிஷா உணர்வுகள் மேலோங்க.
"இளம் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருப்போம்"
போட்டியில் வெற்றிபெற்றது சிங்கப்பூர் வலைப்பந்தின் தரத்தை மேலும் உயர்த்தும் என நம்புவதாகச் சொன்னார் மிஷா.
"தற்போது ஆசியாவிலேயே சிறந்த அணி எனும் பெருமை எங்களுக்கு உண்டு. அது தொடரவேண்டும். மேலும் பல இளம் பெண்கள் வலைப்பந்து விளையாட இது தூண்டுகோலாக இருக்கும்"
விளையாட்டாளர்களுக்கு இருக்கவேண்டிய முக்கிய பண்பு...
போட்டித்தன்மை முக்கியம் என்றாலும் போட்டியாளர்களை மதிக்கவேண்டும். அதுவே ஒரு சிறந்த விளையாட்டாளருக்கு அழகு என்று முத்தாய்ப்பாய்ச் சொன்னார் அமன்தீப்.
இளையர்களுக்குச் சொல்ல விரும்புவது....
பள்ளிக்கூடத்தில் கிடைக்காத பல அனுபவங்களை விளையாட்டுகள் கற்றுத் தரும்...தைரியமாக இறங்குங்கள்!
என நெகிழ்ந்தார் மிஷா.